பெட்ரோல் விலை குறைந்ததால் வரி வருவாய் குறைந்தது - ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்
7/29/2016 3:12:43 PM
சென்னை, - பெட்ரோல், டீசல் விலை குறைந்ததால் அரசின் வரி வருவாயும் குறைந்தது என்று சட்டசபையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான விவாதத்துக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பதில் அளித்தார். அவர் பேசியதாவது:
பல்வேறு கட்சிகள் இந்த நிதிநிலை அறிக்கையை வெற்று அறிக்கை என்று கூறியிருந்தாலும், நடுநிலையாளர்கள் மத்தியில் இது பாராட்டப்பட்டு வெற்றி அறிக்கையாக உள்ளது. நீர்மேலாண்மை உள்ளிட்ட பல வளர்ச்சி திட்டங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. நீர்மேலாண்மை திட்டத்துக்கு மத்திய அரசு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த 2016-17ல் ரூ.205.81 கோடி ஒதுக்கி உள்ளது. வீடு வழங்கும் திட்டம், இளைஞர்களுக்கான திறன்மேம்பட்டு திட்டங்கள் உள்ளிட்ட 5 திட்டங்களுக்கு ரூ.9454 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கடினமான பொருளாதார சூழ்நிலையில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் வளர்ச்சியை நோக்கியே இந்த திட்டங்கள் உள்ளன. வருவாய் பற்றாக்குறை உயர்ந்துள்ளது என்றும், நிதி பற்றாக்குறை உயர்ந்தது என்றும் திமுக உறுப்பினர் எ.வ.வேலு கூறினார். வரி வருவாய் குறைந்து விட்டது என்றும், வருவாய் செலவினம் அதிகரித்து விட்டது என்றும் உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் முதல் மூன்று ஆண்டுகளில் சிறப்பாகவே இருந்தது. அதுதொடர்பான கணிப்புகளும் சரியாக இருந்தது. கடைசி 2 ஆண்டுகளில் இந்த கணிப்புகள் தவறாகி விட்டன என்றும் அவர் கூறியுள்ளார். மாநில வரி வருவாயின் நிச்சயமற்ற தன்மைக்கு காரணம், மத்திய அரசின் மானியம் மற்றும் மத்திய வரி வருவாயில் ஏற்படும் மாற்றம்தான். மாநில வரிவருவாயில் நிச்சயமற்ற போக்கு உள்ள நிலையிலும் பொருளாதார சூழ்நிலை கணிப்பு மாறும். நமக்கு வர வேண்டிய வரிவருவாய் ரூ.6 ஆயிரம் கோடி குறைவாக உள்ளது. இதனால் நிதி மேலாண்மை செயல்பாட்டில் குறைபாடு என்று கூற முடியாது.
2016ல் பொருளாதார சிக்கல் ஏற்பட்டதாலும், 6 முறை பெட்ரோல் 8 முறை டீசல் விலை குறைக்கப்பட்டதாலும் கடந்த 2 ஆண்டுகளில் நமது கணிப்புகள் மாறி உள்ளன. மாநில வரிவருவாய் குறைந்ததற்கு பெட்ரோலிய பொருட்களின் வரிவருவாய் குறைந்ததுதான் காரணம். பெட்ரோல் மீது 25 சதவீதம், டீசல் மீது 15 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. கடந்த 2014-15ல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.76.8ஆக இருந்ததால் வணிகவரி ரூ.15.91 கிடைத்தது. அது லிட்டருக்கு ரூ.61.99 என விலை குறைந்ததால் அதன் மீதான வரி அரசுக்கு ரூ.12.58 கிடைத்தது. இதனால் லிட்டருக்கு ரூ.3.23 வணிகவரி குறைந்துள்ளது.
அரசு ஊழியர் சம்பளம் 70 சதவீதம், ஓய்வூதியம் 54 சதவீதம், மானியம் 135 சதவீதம் என உயர்ந்துள்ளன. இதுவே, வருவாய் பற்றாக்குறை ஏற்பட முக்கிய காரணமாகும். சத்துணவு, மின்சாரம், விவசாயம், சமூகபாதுகாப்பு திட்டங்களுக்கு மானியங்கள் அதிகம் வழங்கப்படுவதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதில் எந்த செலவையும் கட்டுப்படுத்த முடியாது. மாநிலத்துக்கு வரும் வரி வருவாய் 68 சதவீதம், செலவினம் 93 சதவீதமாக உள்ளது. முடிந்த வரை செலவினங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை மாறும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அதுவரை கடினமான பாதையில்தான் செல்ல வேண்டும். ரிசர்வ் வங்கி அறிக்கைப்படி தமிழகத்தின் நிதிபற்றாக்குறை ரூ.31,829 கோடி என்று கூறப்பட்டுள்ளது. வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் செலவு ரூ.10 ஆயிரத்து 458 கோடி செலவுகள் செய்யப்படவில்லை என்றால் நிதிபற்றாக்குறை ஏற்பட்டிருக்காது.
பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கி வருகிறது. ஆனால் நமது மாநிலம் கடன் பெற்றும், சொந்த நிதி திரட்டுதல் மூலமாகவும் தான் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனால்தான் கடன் அளவு அதிகரித்துள்ளது. இதைசரிசெய்ய வரி அளவை கூட்டி செலவினத்தை குறைத்தால்தான் பொருளாதார நிலையை மேம்படுத்த முடியும். அரசே கனிம வளத்தை எடுக்கும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. செலவுகளை கட்டுப்படுத்த சில திட்டங்கள் வகுக்கப்பட உள்ளது. ரூ.2.55 லட்சம் கோடி கடன் உள்ளது என்றும், அதை ஈடுகெட்ட என்ன செய்யப்போகிறீர்கள் என்றும் கேட்கிறார்கள். தற்போது உள்ள சூழலில் கடன் பெற்றுதான் நிதி பற்றாக்குறையை சரிசெய்ய வேண்டியிருக்கும். இவ்வாறு அவர் கூறினர்.