சர்வாதிகாரி போல் செயல்படும் சபாநாயகர் - மு.க.ஸ்டாலின் பேட்டி
7/29/2016 3:11:58 PM
சென்னை, - சட்டசபையில் சபாநாயகர் தனபால் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுவதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று பேசியதில் சில கருத்தக்களை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென திமுக கோரிக்கை விடுத்தது. அது பற்றி இன்று காலை தீர்ப்பளிப்பதாக சபாநாயகர் கூறியிருந்தார். எனினும், காலையில் அவர் தனது தீர்ப்பை வெளியிடாததால், திமுக உறுப்பினர்கள் அவையை புறக்கணித்து வெளியேறினர். இதன்பின், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிய கருத்தை நீக்கினால் மட்டுமே நாங்கள் நிதி அமைச்சரின் பதில் உரையை கேட்போம், இல்லாவிட்டால் சபையை புறக்கணிப்போம் என்று நேற்றே சொல்லி விட்டோம். ஆனால், சபாநாயகர் அது பற்றி தீர்ப்பளிக்க முன்வரவில்லை. இதனால் சபையை புறக்கணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்களை வெளியேற்ற வேண்டும் என்று சபாநாயகர் திட்டமிட்டு செயல்படுகிறார்.அவர் சபையில் சர்வாதிகார போக்கையே கடைபிடித்து வருகிறார். அவரது செயலுக்கு நாங்கள் வருந்துகிறோம். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்துவது போல் சபாநாயகர் சபையை நடத்துகிறார். எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாகவே சபாநாயகர் பார்க்கிறார். ஜனநாயக நடைமுறையில் எதிர்கட்சி விமர்சனங்களை விமர்சனமாக பார்த்து அவையை நடத்த வேண்டும் என்று சபாநாயகருக்கு எங்களது வேண்டுகோளை வைக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.