பண பரிவர்த்தனைகள் பாதிப்பு - நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் : ₹19 ஆயிரம் கோடி காசோலைகள் முடக்கம்
7/29/2016 3:10:26 PM
சென்னை, - பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ரூ.19 ஆயிரம் கோடி காசோலை பணபரிவர்த்தனை முடங்கி உள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும், வங்கிகள் சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கிகள் மீது திணிக்கும் கொள்கைகளை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தனர். டெல்லியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையொட்டி இன்று திட்டமிட்டப்படி ஸ்டிரைக் நடந்தது. இதில் 43 வணிக வங்கிகள், 50 கிராமிய வங்கிகள், நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் பணியாற்றும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர். அதிகாரிகளும் பங்கேற்றதால் பெரும்பாலான வங்கிகள் முடங்கின.
இதற்கிடையில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று காலை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் மாநிலம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்பட 9 சங்கங்கள் கலந்து கொண்டுள்ளதால் போராட்டம் முழு வெற்றி அடைந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இந்த போராட்டத்தால் வங்கிகளில் பணம் போடுவது, பணம் எடுப்பது உள்ளிட்ட சேவைகளை பெற முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காசோலை பரிமாற்றம் இல்லாததால் வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் கூறியதாவது:போராட்டத்தில் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், அயல்நாட்டு வங்கிகள் உள்பட 80 ஆயிரம் கிளைகளில் இருந்து 10 லட்சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அப்படி நடந்தால் விவசாய கடன், கல்வி கடன் உள்ளிட்ட சேவைகள் நிறுத்தப்படும். தனியார் நிறுவனங்கள் லாபம் நோக்கில் மட்டுமே செயல்படுவார்கள்.இதனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்தான் பாதிக்கப்படுவார்கள். எனவே தான் பொதுமக்களின் நலன் கருதி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில், ரூ.78 ஆயிரம் கோடி கடன் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர்கள் யார், எத்தனை ஆண்டுகளாக அவர்கள் வங்கிகளுக்கு பணத்தை திருப்பி செலுத்தாமல் உள்ளனர் என்ற விவரங்களை வெளியிட வேண்டும்.இன்று நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தால் சென்னையில் மட்டும் ரூ.6 ஆயிரம் கோடி மதிப்புள்ள 8 லட்சம் காசோலைகள், நாடு முழுவதும் ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூ.26 லட்சம் காசோலைகள் முடங்கி உள்ளன. எங்களது கோரிக்கைகளை தொடர்ந்து நிராகரித்தால் அடுத்தக்கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.