வாணியம்பாடி அருகே புல்லூரை அடுத்து ஜிங் ஆற்றிலும் ஆந்திரா புதிய தடுப்பணை
7/28/2016 5:36:50 PM
வேலூர், -வாணியம்பாடி அருகே உள்ள புல்லூரை தொடர்ந்து ஜிங்காற்றின் குறுக்கேயும் ஆந்திர அரசு புதிய தடுப்பணையை கட்டி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.வேலூரில் உள்ள பாலாற்றின் குறுக்கே வாணியம்பாடி அடுத்த புல்லூர் மற்றும் 22 இடங்களில் சிறிய தடுப்பணைகளை
ஆந்திர அரசு கட்டியுள்ளது. இதன் உயரத்தை 20 முதல் 30 அடி வரை உயர்த்தி கட்டி தமிழக விவசாயிகளின் வயிற்றிலும், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரத்துக்கும் வேட்டு வைக்கும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளது. இப்பணியில் 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது.
மேலும், பாலாற்றுக்கு நிரந்தர தண்ணீர் வரத்துள்ள திப்ரே துணை ஆற்றின் குறுக்கிலும் 5 தடுப்பணைகள் கட்டி வருவதுடன், ஏற்கனவே பணி நிறுத்தப்பட்ட கணேசபுரம் தடுப்பணை அருகில் 7 அடி உயரம் உள்ள தடுப்பணையை 20 அடி வரையும் உயர்த்தி கட்டியுள்ளது.
இந்நிலையில் தமிழக எல்லைக்குள் உள்ள மண்டக்காடு காட்டுப்பகுதியில் அம்மா பாதம் மலைக்கும், சவலை மலைக்கும் இடையே உள்ள வனப்பகுதியில் உற்பத்தியாகி ஓடி வரும் ஜிங் காட்டாறு கனகநாச்சியம்மன் கோயில் அருகே புல்லூரில் பாலாற்றில் இணைகிறது. இந்த ஜிங் காட்டாற்றின் குறுக்கே புதிதாக ₹6 கோடி மதிப்பீட்டில் 20 அடி உயரம் கொண்ட மிகப்பெரிய தடுப்பணை கட்டும் பணியை கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கி 60 சதவீதத்துக்கும் மேலான பணிகளை முடித்துள்ளது. அதோடு தமிழக-ஆந்திர எல்லையில் இரண்டு சரிவுகளை கொண்ட மலைகளில் இருந்து வழிந்தோடி வரும் தண்ணீரையும் தடுத்து நிறுத்தி குட்டைகள் கட்டும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக பாலாற்றை கபளீகரம் செய்து விடும் தீவிரத்துடன் ஆந்திர மாநிலத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது. இது வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்திஉள்ளது.