நெல்லையில் நள்ளிரவில் பரபரப்பு - வியாபாரிகள் சங்க நிர்வாகியை தாக்கி ₹3 லட்சம் வழிப்பறி : பைக்கையும் பறித்து கொள்ளையர்கள் ஓட்டம்
7/28/2016 5:08:20 PM
நெல்லை, -நெல்லையில் நேற்று நள்ளிரவில் வியாபாரி சங்க நிர்வாகியை தாக்கி மர்ம நபர்கள் ரூ.3 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். பைக்கையும் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.நெல்லை டவுன் தெற்கு மவுன்ட் ரோட்டை சேர்ந்தவர் குணசேகரன்(55). இவர் நெல்லை வாகையடிமுனையில் சீனி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார். நெல்லை மாநகர வியாபாரிகள் சங்க பொருளாளராக உள்ளார். இவர் தினமும் இரவு 11 மணியளவில் வியாபார கணக்குகளை முடித்து விட்டு கடையை மூடிவிட்டு பைக்கில் வீடு திரும்புவார். நேற்று இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்து இரவு 11.30 மணிக்கு பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் உள்ள பெட்டியில் ரூ.3 லட்சம் பணம் வைத்திருந்தார். சந்திபிள்ளையார் ேகாயில் வழியாக தெற்கு மவுன்ட்ரோடு சாலையில் செல்லும்போது 2 பேர் அவரை வழிமறித்தனர்.
இதனையடுத்து குணசேகரன் பைக்கை நிறுத்தினார். அப்போது திடீரென அந்த நபர்கள் அவரை கம்பால் தாக்கி பைக்கிலிருந்து கீழே தள்ளினார்கள். இதனை சற்றும் எதிர்பாராத குணசேகரன் சுதாரித்துக்கொள்வதற்குள் அந்த நபர்கள் அவரை பைக்கை பறித்து கொண்டு தப்பினர். குணசேகரன் கூச்சலிட்டபடி சற்று தூரம் விரட்டி சென்றார். ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் மாயமாகிவிட்டனர்.இரவு நேரம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லை. உடனே குணசேகரன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். மாநகர குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். குணசேகரன் கடையில் லட்சக்கணக்கில் மொத்த வியாபாரம் நடக்கும். தினமும் மதியம் வரை நடக்கும் பணத்தை வங்கியில் செலுத்திவிடுவார். மாலையில் இருந்து இரவு வரை நடக்கும் பணத்தை வங்கியில் செலுத்த முடியாததால், இரவு வீட்டிற்கு எடுத்து செல்வார். அந்த பணத்தை மறுநாள் காலையில் வங்கியில் செலுத்துவார். இதுபோல் நேற்று இரவு எடுத்து செல்லப்பட்ட பணம் ரூ.3 லட்சத்தையும் அவர் எடுத்து செல்லும்போது தான் மர்ம நபர்கள் அவரை மறித்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால் பைக்கையும் துணிச்சலுடன் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.