ஊட்டி அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை ெசய்த மூதாட்டிக்கு பார்வை இழப்பு
7/28/2016 5:07:53 PM
ஊட்டி, -நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள இளித்தொரை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணம்மாள். இவரது தாயார் சுப்பியம்மாள்(80). இவரது கண்பார்வை குறைந்த நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி ஊட்டி தலைமை அரசு மருத்துவமனையில் வலது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை ெசய்தார். ஆபரேஷனுக்கு பின் அந்த கண்ணில் பார்வை தெளிவானது. இடது கண்ணில் பார்வை குறைபாடு ஏற்படவே, மீண்டும் ஊட்டி அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் தேதி அறுவை சிகிச்சை செய்துள்ளார். அப்போது அவரது கண்ணில் ரத்தம் கசிந்துள்ளது. குடும்பத்தினர் கேட்டபோது, ரத்தக்கசிவு சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், சுப்பியம்மாளுக்கு கண்ணில் வலி அதிகரித்துள்ளது. மேலும், நீர் கசிந்துக் கொண்டே இருந்துள்ளது.
இதையடுத்து பல முறை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போதெல்லாம், கண் அறுவை சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லாத நிலையில், நர்சுகளே சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், கண் தெரிவதில்லை எனக் கூறிய போது, சரியாகிவிடும் என ஒவ்வொரு முறையும் கூறியுள்ளனர். ஆனால், சுப்பியம்மாளுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கண்ணில் அதிக வலி ஏற்பட்டதால், தனியார் கண் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். அவர்கள், சுப்பியம்மாளின் பார்வை போய்விட்டது. தவறான சிகிச்சையால் கண்ணில் காயமும் ஏற்பட்டுள்ளது, என்று கூறியுள்ளனர். எனினும்,வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சுப்பியம்மாளை காண்பித்தபோது, காயம் அடைந்த கண்ணில் வலியை போக்க மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், திரும்ப பார்வை கிடைக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.இதனால், அதிர்ச்சியடைந்த சுப்பியம்மாள் குடும்பத்தினர். மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். அதில், சுப்பியம்மாள் பார்வை இழப்பிற்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.