பாயும் அம்பு
7/27/2016 5:23:08 PM
லட்சுமி ராணியின் குடும்பத்திற்கு மிகவும் முக்கியமாகபட்டது, முதலில் அவர் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதுதான். ஏனென்றால் மேற்கு வங்க மாநிலம் பகுலாவில் உள்ள லட்சுமி ராணியின் கிராமத்தில், அப்போது பெரும்பாலும் பெண் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லவில்லை. உலக வில் வித்தை அரங்கில் இன்று அதிர்வலைகளை ஏற்படுத்தி கொண்டிருக்கும் லட்சுமிராணி, அந்த வாய்ப்பை வழங்கியதற்கு முதலில் பெற்றோருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். பள்ளிக்கு சென்றதன் மூலமாகதான் வில் வித்தையை பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பே லட்சுமி ராணிக்கு கிடைத்தது. லட்சுமி ராணி படித்து வந்த பகுலா அரசு பள்ளிக்கு, தேசிய வில்வித்தை பயிற்சியாளர் தர்மேந்திர திவாரி கடந்த 2002ம் ஆண்டு வந்தார். யாருக்கெல்லாம் வில் வித்தையை கற்று கொள்ள ஆர்வம் உள்ளது என்று மாணவ, மாணவிகள் மத்தியில் கேட்டார் தர்மேந்திர திவாரி. உயர்ந்தது ஒரே ஒரு கை தான். அது லட்சுமி ராணியின் கை.
கடந்த ஆண்டு டென்மார்க்கில் நடந்த உலக வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகளில், வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் ரியோ ஒலிம்பிக்குக்கு லட்சுமி ராணி தகுதி பெற்றார். இதில், தனியாகவும், அணியாகவும் போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்தியாவின் முன்னணி வில் வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி உள்ளிட்டோர் அடங்கிய அணியில் லட்சுமி ராணியும் இடம் பெற்றிருக்கிறார். லட்சுமி ராணியின் தந்தை நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்து வந்தார். துவக்கத்தில் போட்டிகளில் கலந்து கொள்ள லட்சுமி ராணியை வீட்டில் இருந்து வெளியே அனுப்புவதற்கு அவர் ஒப்பு கொள்ளவில்லை. ஆனால் இந்த பொறுப்பை ஏற்று கொண்ட லட்சுமி ராணியின் தாய், கணவரை சமாதானம் செய்து மகளை போட்டிகளுக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால் லட்சுமி ராணியின் தந்தை இனிமேல் நிலக்கரி சுரங்கத்தில் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால் சமீபத்தில் இந்திய ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்துள்ளார் லட்சுமி ராணி. ‘எனது தந்தையின் பணி மிகவும் அபாயகரமானது. அந்த தொழிலை அவர் செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை. எனது தந்தை தற்போது நல்ல நிலையில் உள்ளார்’ என மகிழ்ச்சியுடன் கூறுகிறார் லட்சுமி ராணி. லட்சுமி ராணியை நினைத்து அவரது குடும்பம் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்து கொண்டிருக்கிறது. தற்போது 27 வயதாகும் லட்சுமி ராணிக்கு இது முதல் ஒலிம்பிக். அழுத்தத்தின் கீழும் சிறப்பாக செயல்படுவது இவரது பெரிய பலம். தொடர்ச்சியாக 10எஸ் ஸ்கோர் செய்வதிலும் லட்சுமி ராணி வல்லவர். அணி போட்டிகளில் இதுவே வெற்றிக்கான சாவியாக விளங்கும். அணியை பேலன்ஸ் செய்வதில் லட்சுமி ராணி முக்கிய பங்காற்றுவார் என்பது அவரது பயிற்சியாளரின் நம்பிக்கை. இறுதி கட்ட பயிற்சிக்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இந்திய வில் வித்தை அணியுடன் லட்சுமி ராணி பிரேசில் சென்று விட்டார். அங்கு கடின பயிற்சி மேற்கொண்டு வரும் லட்சுமி ராணி, பதக்க மேடையேறுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.