பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் 330 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி
7/26/2016 5:33:44 PM
மான்செஸ்டர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 ஒரு நாள், 1 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்து வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், 75 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.
இரு அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஓல்டு டிராபோர்டில் கடந்த 22ம் தேதி துவங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 254, கேப்டன் அலைஸ்டர் குக் 105 ரன்கள் எடுத்தனர். இதன்பின் முதல் இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான் 198 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, பாலோ ஆன் ஆனது. இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 4, ஸ்டோக்ஸ், மொயின் அலி தலா 2, ஆண்டர்சன், பிராடு தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆனால் பாலோ ஆன் கொடுக்காமல் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து, 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்திருந்தது. 4வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து மேற்கொண்டு விக்கெட்
இழக்காமல், 173 ரன்எடுத்து டிக்ளேர் செய்தது. குக் 76, ஜோ ரூட் 71 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 565 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய பாகிஸ்தான், இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இறுதியில் 234 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட்டாக, 330 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் 2வது இன்னிங்சில் அதிகபட்சமாக ஹபீஸ் 42 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், வோக்ஸ், மொயின் அலி தலா 3, ஜோ ரூட் 1 விக்கெட் எடுத்தனர். ஆட்ட நாயகன் விருதை ஜோ ரூட் தட்டி சென்றார். முதல் டெஸ்ட் தோல்விக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து, 1-1 என தொடரையும் சமன் செய்தது. 3வது டெஸ்ட் வரும் 3ம் தேதி பர்மிங்காமில் துவங்குகிறது.