திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கபிரதட்சணம் செய்ய ஆதார் கட்டாயமில்லை - பக்தர்கள் எதிர்ப்பால் தேவஸ்தானம் வாபஸ்
7/21/2016 4:28:44 PM
திருமலை, -திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கபிரதட்சணம் செய்ய ஆதார் கட்டாயமில்லை என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப மூலவர் சன்னதியை சுற்றியுள்ள பகுதியில் அங்கபிரதட்சணம் செய்து வருகின்றனர். வியாழன் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் அங்கபிரதட்சணம் செய்ய மதியம் 1.30 மணிக்கு ₹750 கட்டண டிக்கெட் வழங்கப்படுகிறது. இதற்கு பக்தர்களின் கைரேகை பதிவு செய்தும், போட்டோ எடுக்கப்பட்டும் டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது.இதில் முறைகேடு நடப்பதாக புகார் வந்தது. இதை தடுக்க நேற்று முதல் (20ம்தேதி) அங்கபிரதட்சணம் செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்திருந்தது.
இதையறியாத பக்தர்கள் நேற்று ஆதார் அட்டை இல்லாமல் வந்ததால் அவர்களுக்கு அங்கப்பிரதட்சணம் செய்ய டிக்கெட் வழங்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.‘நாங்கள் வெகுதூரத்தில் இருந்து வந்துள்ளோம். திடீரென டிக்கெட் வழங்க மறுத்தால் நாங்கள் எப்படி வேண்டுதலை நிறைவேற்றுவது’ என ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து ஊழியர்கள், தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆதார் அட்டை இல்லாமல் வந்துள்ளவர்களுக்கும் அங்கபிரதட்சணம் செய்ய டிக்கெட் வழங்கலாம் என தெரிவித்தனர்.
‘முறைகேடுகளை தடுக்கவே ஆதார் அட்டையை கட்டாயமாக்கினோம். இது பக்தர்களை பாதிக்கும் என்றால் அதை வெறும் அடையாள அட்டைக்காக மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதனால் அங்கபிரதட்சணம் செய்ய ஆதார் கட்டாயமில்லை’ என தெரிவித்துள்ளனர்.இதை அனைத்து பக்தர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.