இரவிலும் மூடப்படாத நந்திவரம் பெண்கள் பள்ளி-சமூக விரோதிகள் தஞ்சம்?
7/20/2016 4:43:19 PM
கூடுவாஞ்சேரி, -சென்னை அருகே நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 7.50 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இப்பள்ளியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். இப்பள்ளியில் மாணவிகளுக்கு போதிய கழிவறை வசதி கிடையாது. தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் கிணறும் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதனால் மாணவிகள் திறந்தவெளியிலும் முட்புதர்களின் மறைவிலும் இயற்கை உபாதைகளை கழித்து வருகின்றனர். பள்ளி சுற்றுச்சுவர் உடைந்துள்ளது. இதனால் எந்த பக்கமும் மாணவிகள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த பள்ளியின் நுழைவுவாயில் கேட் இரவு முழுவதும் திறந்து கிடக்கிறது. இதனால் சமூக விரோதிகள் நுழைந்து சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் அங்கேயே மது அருந்தி ஜாலியாக பொழுதுபோக்குகின்றனர். இவர்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை சம்பந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்வதில்லை.இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளி நிர்வாகத்தினரிடம் மாணவிகளின் பெற்றோர் பலமுறை புகார் கூறியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக உள்ளனர்.இப்பள்ளியின் சுற்றுச்சுவரை உயர்த்தவும், நுழைவு வாயிலை இரவு நேரங்களில் மூடவும் சம்பந்தப்பட்ட கல்வி துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.