ரூ.7 கோடியில் நடைபெற்ற சாமியாரின் இறுதி சடங்கு
7/10/2025 2:56:04 PM
ராஜ்கார்: மத்திய பிரதேசத்தில் சாமியார் ஒருவரின் இறுதி சடங்கு மிகவும் பிரமாண்டமான முறையில் ரூ.7 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
ஜெயின் சமூகத்தை சேர்ந்த சமணத் துறவி மத்விஜய் ரவீந்திரசூரி மகராஜ் சாகேஜி (62). சமண சமூகத்தில் உயிரிழப்பவர்களுக்கு ஏராளமான இறுதி சடங்குகள் செய்யப்படுவது வழக்கம். கடந்த வாரம் மத்திய பிரதேசத்தில் உள்ள தார் மாவட்டத்தில் ராஜ்காரில் மத் விஜய் காலமானார். இவரது இறுதி சடங்குகளை பிரமாண்டமாக நடத்தி முடிப்பது என ஜெயின் சமூகத்தினர் முடிவு செய்தனர். உலகம் முழுவதும் உள்ள தங்களது சமூகத்தினரிடம் இருந்து நன்கொடை வசூலித்தனர். துபாயில் வசிக்கும் ஜெயேஷ்பாய் என்பவர் மட்டுமே ரூ.68 லட்சம் அனுப்பினார். இதே போல், பல இடங்களில் இருந்தும் ரூ.42 லட்சம், ரூ.27 லட்சம் என நன்கொடைகள் குவிந்தன.
ஜெயின் சமூகத்தின் மிகவும் மூத்த துறவி என்று மத்விஜய் போற்றப்படுகிறார். ராஜ்காரில் உள்ள மோகன்கேதா கோயில் சார்பில் இந்த தொகை வசூலிக்கப்பட்டு இறுதி சடங்கு மிகவும் பிரமாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வாசனை திரவியங்கள், அலங்கார பொருட்கள் என அவரது உடலுக்கு இறுதி சடங்கு அன்று மட்டும் சுமார் ரூ.7 கோடியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், துறவிகள் இறந்தால் பொதுவாக உள்ளூர் ஜெயின் சமூகத்தினர் உடலை நல்லடக்கம் செய்வர். ஆனால் இவருக்கு பாரம்பரிய சடங்கை செய்ய வேண்டும் என்று அன்பர்கள் விரும்பியதையடுத்து இந்த சடங்கு இவ்வளவு செலவில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றார். ரூ.7 கோடிக்கும் அதிகமான செலவில் முடிக்கப்பட்ட மத்விஜய் இறுதி சடங்கு நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.