பைக்குகள் மோதல் விவகாரத்தில் கான்டிராக்டர் முகத்தில் குத்திய இன்ஸ்பெக்டர்; போலீசில் புகார்
7/9/2025 1:40:58 PM
திருவொற்றியூர், -சென்னை மணலி, புதுநகர், வடிவுடையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் (40). கட்டிட கான்டிராக்டர். இவர் நேற்றிரவு மணலி புதுநகர் சாலை வழியாக வீட்டுக்கு பைக்கில் சென்றார். அப்போது எதிரே யுவராஜ் என்பவர் பைக்கில் வேகமாக வந்து, விஜயகுமாரின் பைக் மீது மோதியுள்ளார். இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதுகுறித்து அங்கிருந்த போக்குவரத்து போலீசாரிடம் இருவரும் புகார் செய்தனர். போலீசார் இருவரிடமும் விசாரித்து கொண்டிருக்கும்போது, அவ்வழியாக ஜீப்பில் மணலி புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வந்தார். அவர் வாக்குவாதம் நடந்த இடத்துக்கு சென்று கான்டிராக்டர் விஜயகுமாரிடம் ‘மது குடித்துவிட்டு வண்டி ஓட்டுகிறாயா?’ என்று கேட்டிருக்கிறார். ‘எனக்கு மது குடிக்கும் பழக்கம் இல்லை. என் பைக் மீது யுவராஜ்தான் வேகமாக மோதினார்’ என்று விஜயகுமார் கூறியுள்ளார்.
‘என்னிடமே எதிர்த்து பேசுகிறாய்?’ என்று கோபம் அடைந்த இன்ஸ்பெக்டர் சரவணன், கான்டிராக்டர் விஜயகுமாரின் முகத்தில் சரமாரியாக தாக்கினார். விஜயகுமாரின் கண்ணில் அடிபட்டு சிவந்ததுடன் முகமும் வீங்கியது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் சரவணன் அங்கிருந்து சென்றுவிட்டார். திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகுமார் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்ஸ்பெக்டர் சரவணனின் அடாவடி செயல் குறித்தும் அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எண்ணூர் உதவி ஆணையரிடம் விஜயகுமாரும் அவரது குடும்பத்தினரும் புகார் அளித்தனர். இதுபற்றி எண்ணூர் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விசாரித்து வருகிறார்.