தந்தைக்கு வாட்ஸ் அப்பில் தகவல் ஐ.எஸ். தீவிரவாதிகளாக மாறிய கேரள வாலிபர்கள், பெண்கள் - பரபரப்பு தகவல்கள்; தமிழகத்தில் உளவுப்படை உஷார்
7/9/2025 1:27:30 PM
காசர்கோடு, - கேரளாவில் மாயமான 4 பெண்கள் உள்பட 15 பேர் ஐ.எஸ். தீவிரவாதிகளாக மாறியிருக்கும் தகவல், ஒருவர் தனது தந்தைக்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ் மூலம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, மத்திய உளவுப் படையினர் கேரளாவில் ரகசிய புலனாய்வு விசாரணையை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய முஸ்ருதீன் சிக்கியதால், தமிழகத்திலும் எல்லை மாவட்டங்களில் உளவு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். இவர் கடந்த 34 ஆண்டுகளாக துபாயில் ஆட்டோமொபைல் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவரது ஒரே மகன் ஹபிசுதீன் (24). ஹக்கீம் தனது மகனை ஆரம்பத்தில் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள பள்ளியில் படிக்க வைத்தார். பின்னர், மும்பையில் உள்ள கல்லூரியில் சேர்த்தார். கல்லூரியில் பி.காம் படித்து வந்து ஹபிசுதீன் 2 ஆண்டுகளில் படிப்பை விட்டுவிட்டார். இதனால், ஹபிசுதீனை தனது சொந்த ஊரான காசர்கோடு மாவட்டம் பத்னேவுக்கு ஹக்கீம் அனுப்பி வைத்தார். அங்கும் ஹபிசுதீன் ஒழுங்காக இல்லாததால், அவரை துபாய்க்கு அழைத்து தனது ஒர்க்ஷாப்பில் ஹக்கீம் வைத்துக் கொண்டார்.
இந்நிலையில், ஹபிசுதீன் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மீண்டும் காசர்கோடுக்கு வந்துள்ளார். கடந்த மே 28ம் தேதியன்று பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்காக கோழிக்கோடு செல்வதாக கூறிவிட்டு சென்ற ஹபிசுதீன் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. ரம்ஜான் தினத்தன்று ஹக்கீமுக்கு +93 என்று துவங்கும் ரகசிய எண்ணில் இருந்து வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்துள்ளது. ஹபிசுதீன் பெயரில் அனுப்பப்பட்டிருந்த அதில், ‘‘நாங்கள் அனைவரும் இஸ்லாமிய தேசமான ஐ.எஸ். நாட்டிற்கு வந்து விட்டோம். நான் ஐ.எஸ், அமைப்பில் இணைந்து பணியாற்றுகிறேன். இங்கு வரி எதுவும் கிடையாது. சில சமயம் தலைக்கு மேலே விமானம் பறக்கும். சில நேரங்களில் குண்டு வீசப்படும். அதை தவிர வேறு பிரச்னைகள் எதுவும் கிடையாது’’ என்று கூறப்பட்டிருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹக்கீம் கதறி அழுதார்.
தனது மகன் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து விட்ட விபரீதத்தை உணர்ந்த அவர் தனதுஉறவினர்களிடம் கூறினார். அப்போதுதான் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் ஹபிசுதீனுடன் ஐஎஸ் இயக்கத்தில் சேர சிரியா சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஹபிசுதீனின் மாமா சலீம் கூறுகையில், ‘‘ஹபிசுதீனின் உறவினரான டாக்டர் இஜாஸ், பல் டாக்டரான அவரது மனைவி, அவர்களது 2 வயது குழந்தை, இஜாஸின் சகோதரர் ஷியாஸ், அவரது மனைவி, எனது உறவினர் அஸ்பாக், அவரது மனைவி, இவர்களது 8 மாத கைக்குழந்தை ஆகியோர் மாயமாகி உள்ளனர். மொத்தம் 15 பேர் ஐ.எஸ், அமைப்பில் சேர்ந்திருப்பது உறுதியாகிறது.
இவர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக சந்தேகத்திற்கு இடம் இல்லாத வகையில் சென்றுள்ளனர். துபாய் சென்ற இவர்கள் அங்கு முர்ஷித் மற்றும் சஜித் ஆகிய இருவருடன் இணைந்து சென்றிருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஏற்கனவே பத்னாவை சேர்ந்தவர்கள். மாயமான அனைவரும் 35 வயதிற்கு உட்பட்டவர்கள்தான். அவர்கள் ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் அனுப்பியிருக்கிறார்கள்’’ என்று தெரிவித்தார்.
தனது ஒரே மகன் ஹபீசுதீன் இப்படி சென்றது ஹக்கீமை மிகவும் பாதித்துள்ளது. ‘‘அவன் ஐ.எஸ். தீவிரவாதியாக மாறியிருந்தால் அவனது பிணத்தைக் கூட பார்க்க விரும்பவில்லை’’ என்று வேதனையுடன் அவர் கூறினார்.
இந்நிலையில், காசர்கோடு மார்க்சிஸ்ட் எம்பி கருணாகரன், திருகரிப்பூர் எம்எல்ஏ ராஜகோபால், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் முதல்வர் பினராயி விஜயனை நேற்று சந்தித்து, இந்த விவகாரத்தில் உடனடியாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். பிரதமர் மோடிக்கும் 15 பேரின் குடும்பத்தினர் புகார் மனுக்களை அனுப்பியுள்ளனர். கேரள ஏடிஜிபி சுதேஷ் குமார் கூறுகையில், ‘‘அனைத்து தகவல்களையும் திரட்டி வருகிறோம். காசர்கோடு பகுதியில் தீவிரமாக புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உறவினர்களிடம் இருந்து முறையான புகார் எழுதி வாங்கியுள்ளோம்’’ என்றார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளாக மாறியவர்கள், காசர்கோட்டில் உள்ள பத்னா, திரிகரிப்பூர், பாலக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கேரள போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பகுதிகள் கேரளா, தமிழகம், கர்நாடக எல்லைகளில் அமைந்த பகுதிகளாகும். இதனால், கேரளா மட்டுமின்றி தமிழகம், கர்நாடகாவில் உள்ள எல்லைப்பகுதிகளிலும் தேசிய புலனாய்வு படையினர் (என்ஐஏ) உள்பட மத்திய புலனாய்வு அமைப்புகள் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் திருப்பூரில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய முஸ்ருதீன் 6 ஆண்டுகளாக தங்கியிருந்ததும், நூற்றுக்கும் மேற்பட்ட வாலிபர்களை அவர் அழைத்து வந்ததும் சமீபத்தில் தெரிய வந்திருக்கிறது. இதனால், ஏற்கனவே கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மத்திய உளவு படையும், மாநில உளவு பிரிவினரும் தீவிரமாக கண்காணித்து, ரகசிய புலனாய்வு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.