24 மத்திய அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்குகள் - 72 பேர் கோடீஸ்வரர்கள்
7/9/2025 1:00:38 PM
புதுடெல்லி, -மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களில் 31 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. கோடீஸ்வர அமைச்சர்கள் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.மத்திய அமைச்சரவை அண்மையில் மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக 19 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்த சூழலில் அமைச்சரவையின் பலம் 78 ஆக உயர்ந்துள்ளது. அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள எம்பிக்களின் சொத்து மற்றும் வழக்குகள் குறித்து அண்மையில் அவர்கள் லோக்சபா மற்றும் ராஜ்யசபா தேர்தல்களில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதையொட்டி ஜனநாயக சீர்திருத்தத்திற்கான கூட்டமைப்பு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆய்வு நடத்தியது. அது வெளியிட்டுள்ள அறிக்கையில், மொத்தமுள்ள 78 அமைச்சர்களில் 24 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதிலும் குறிப்பாக 18 சதவீதம் பேர் மீது அதாவது 14 பேர் மீது கொலை, வகுப்பு கலவரத்தை தூண்டி விடுதல், தேர்தல் வன்முறை உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் உள்ளன.
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 92 சதவீதம் அதாவது 72 பேர் கோடீஸ்வர அமைச்சர்கள். அண்மையில் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றவர்களின் சராசரி சொத்து மதிப்பு மட்டும் ரூ.8.73 கோடி. ஒட்டு மொத்தமாக ஒரு அமைச்சரின் சொத்து மதிப்பு ரூ.12.94 கோடி.மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு அண்மையில் அமைச்சரான எம்.ஜே. அக்பரின் சொத்து மதிப்பு ரூ.44.90 கோடி. இவருக்கு அடுத்த படியாக பி.பி.சவுத்ரியின் சொத்து மதிப்பு 35.35 கோடி, இதையடுதது ராஜஸ்தான் ராஜ்யசபா எம்பியான விஜய் கோயலின் சொத்து மதிப்பு ரூ.29.97 கோடி.
அமைச்சரவையில் அதிகபட்ச சொத்துகளை கொண்டவராக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.200 கோடிக்கும் அதிகமாகும். இவருக்கு அடுத்தபடியாக ஹர்சிம்ரத் கவுர், பியூஷ் கோயல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பெரும்பான்மையான அமைச்சர்கள் 41 முதல் 60 வயது நிரம்பியவர்கள். 3 பேர் 31 முதல் 40 வயது உடையவர்கள். 31 பேர் 61 முதல் 80 வயது கொண்டவர்கள். மொத்த அமைச்சர்களில் 12 சதவீதம் அதாவது 9 பேர் மட்டுமே பெண்கள்.புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்களில் மிகவும் குறைவான சொத்து மதிப்பு கொண்டவராக அனில் மாதவ் தவேயின் சொத்து மதிப்பு ரூ.60.97 லட்சம். 6 அமைச்சர்கள் மட்டுமே ரூ. 1 கோடிக்கும் குறைவான சொத்துகளை கொண்டவர்கள் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.