கிருஷ்ணகிரி அருகே பஸ் மோதி கால் முறிந்த யானை உயிரிழந்தது
7/6/2025 4:47:54 PM
ஊட்டி, -கிருஷ்ணகிரி அருகே அரசு பஸ் மோதி கால் முறிந்த யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி யானை இறந்தது.
கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு பஸ் மோதி கால் முறிந்த 15 வயதுடைய ஆண் மக்னா யானை முதுமலை தெப்பக்காடு முகாமிற்கு லாரி மூலம் நேற்றிரவு கொண்டு வரப்பட்டது. வளர்ப்பு முகாமில் வைக்ேகாலை கொண்டு உருவாக்கப்பட்ட மெத்தையில் யானையை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் நிவாசரெட்டி, துணை கள இயக்குநர் சரவணன் உள்ளிட்ட வன அதிகாரிகள் முன்னிலையில் யானைக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டது. யானையின் உடல் நலம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் யானை இன்று உயிரிழந்தது.இதுகுறித்து கால்நடை மருத்துவர் மனோகரன் கூறுகையில், ‘’ யானையின் வலது பின்னங்காலில் முறிவு, முதுகெலும்பின் கடைசி பகுதியிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. பின்னங்கால் மற்றும் வால் பகுதியில் எவ்வித உணர்ச்சியும் இல்லை. யானை படுத்த நிலையில் உள்ளதால் எந்த ஒரு உணவும் எடுத்து கொள்ள முடியாததால் ஊசி மூலம் குளுகோஸ் சத்து மருந்து மற்றும் திரவ வடிவில் உணவு கொடுத்தோம். இருப்பினும் மாரடைப்பு (கார்டியா கரஸ்ட்) ஏற்பட்டதால் யானை இறந்து விட்டது’ என்றார்