கல்லூரி மாணவி குறித்து பேஸ்புக்கில் ஆபாச பதிவு வாலிபர் அதிரடி கைது
6/27/2016 2:57:53 PM
கள்ளக்குறிச்சி: புதுவை மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (53). இவரது மகள் (20), விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த கரடிசித்தூரில் உறவினர் வீட்டில் தங்கி, சின்னசேலம் அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எம்.இ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், அதே ஊரை சேர்ந்தவரும், சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவருமான சோமநாதன் மகன் மதியழகன் (24) என்பவருக்கும் ராங் கால் நம்பர் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில் கடந்த மாதம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, கல்லூரி மாணவி மதியழகனுடன் பேசுவதை தவிர்த்து விட்டாராம்.
இதனால் ஆத்திரமடைந்த மதியழகன், மாணவியைப் பற்றி பேஸ்புக்கில் ஆபாசமாக தகவலை பதவி செய்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மாணவியின் தந்தை வின்சென்ட் நேற்று கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்த மதியழகனிடம் ஏன் எனது மகள் குறித்து ஆபாசமான தகவலை பேஸ்புக்கில் பதிவு செய்தாய் என தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மதியழகன், வின்சென்டை அசிங்கமாக திட்டி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து வின்சென்ட் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து மதியழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.