கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை ரூ. 10 சரிவு முருங்கை ரூ. 100, பீன்ஸ் ரூ. 70
6/16/2016 2:20:20 PM
அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திர மாநிலத்தின் மதனபள்ளி, பலமனேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கர்நாடகாவில் சீனிவாசபுரம், சிந்தாமணி, கோலார், ஒட்டிபள்ளி முதலான பகுதிகளில் இருந்தும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தக்காளி வந்து சேருகிறது.கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை ரூ. 100, ரூ. 120 என்ற அளவில் உச்சத்துக்கு சென்றது. இதனால் தக்காளியின் விலையை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் பலர் தங்கள் வீட்டு சமையலில் தக்காளியின் உபயோகத்தை குறைக்க துவங்கினர். இதனால் தக்காளியின் விற்பனை சரியத் தொடங்கியது.
கடந்த 3 மாதங்களுக்கு முன் தக்காளி விலை கிலோ ரூ. 20-க்கு விற்பனையானது. இதனால் தக்காளி பயிரிடுபவர்களும் வியாபாரிகள் பெரிதும் நஷ்டத்துக்கு உள்ளானார்கள். இதைத் தொடர்ந்து விவசாயிகள் தக்காளி பயிரிடுவது குறைந்தது. இதையொட்டி, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறையத் தொடங்கியதால், சமீபகாலமாக விலை கிடுகிடுவென உயர ஆரம்பித்தது. தற்போது நேற்று முதல் தக்காளி விலை சரியத் தொடங்கி உள்ளது.இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விற்பனை விலையில் நேற்று ரூ. 90-க்கு விற்ற தக்காளி, இன்று கிலோ ரூ. 10 குறைந்து, ரூ. 80-க்கு விற்கப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் தக்காளி விலை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது என்று மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று மற்ற காய்கறிகளின் விலை விவரம் (மொத்த விலை கடைகளில் ஒரு கிலோ): முருங்கை - ரூ. 100, பீன்ஸ் - ரூ. 70, உருளைக்கிழங்கு - ரூ. 22, பெரிய வெங்காயம் ரூ. 20, கேரட் - ரூ.40, நூக்கோல் - ரூ. 30, செளசௌ - ரூ. 35, முட்டைகோஸ் - ரூ. 20, பச்சை மிளகாய் - ரூ. 60, கத்தரிக்காய் - ரூ. 20, அவரை - ரூ. 50, பாகற்காய் - ரூ. 40, கொத்தவரங்காய் - ரூ. 30, காலிபிளவர் - ரூ. 30, சின்ன வெங்காயம் - ரூ. 40, முள்ளங்கி - ரூ. 20, புடலங்காய் - ரூ. 30 என்று மேற்கண்ட தகவல்களை வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.