17ம் நூற்றாண்டு காசுகள், பீரங்கி குண்டுகள் ரஞ்சன்குடி கோட்டையில் கண்டெடுப்பு
6/11/2025 12:04:37 PM
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரலாற்று ரீதியாகப் பெருமை சேர்க்கும் சுற்றுலா தலம் ரஞ்சன்குடி கோட்டை. பெரம்பலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தொலைவில், மங்களமேடு கிராமத்தை ஒட்டியுள்ள ரஞ்சன்குடியில் இக்கோட்டை உள்ளது.சந்தாசாஹிப்-பிரெஞ்சு கூட்டுப்படைக்கும், முகமதுஅலி-ஆங்கிலேய கூட்டுப்படைக்கும் இடையே 1751ம் ஆண்டு நடந்த வால்கொண்டாபோர், ரஞ்சன்குடி கோட்டையை மையமாக வைத்து நடந்ததாக வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.
கோட்டையைச்சுற்றி அகழிகள், விதான மண்டபம், பீரங்கி மேடை, கொடிமேடை, தண்டனை கிணறு, வெடிமருந்துக்கிடங்கு, புறவழி சுரங்கப்பாதை, பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபம், முகமதியர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட மசூதிகள், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாதபடி துளைகள் இடப்பட்ட சுற்றுச்சுவர், குதிரை லாயம் மற்றும் கடல் மட்டத்திலிருந்து 152அடி உயரமுள்ள கோட்டையின் உச்சியில் அமைக்கப்பட்ட குளம் போன்றவை இன்றளவும் அழியாமல் உள்ளன.
இந்தியத் தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள இக்கோட்டையில் காவலாளியாக அவ்வூரைச் சேர்ந்த காசிம்(71) என்பவர் 37 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். கோட்டையில் ஆங்கிலேயர்கள், பிரான்ஸ்காரர்கள் மற்றும் முகமதியர்கள் ஆதிக்கத்தின்போதும் தமிழகத்தில் பயன் படுத்தப்பட்ட 400 ஆண்டுகள் பழமையான 50க்கும் மேற்பட்ட தாமிரக்காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சேகரித்த காசிம், அவ்வப்போது பெரம்பலூர் கலெக்டர்களாகப் பதவியில் இருக்கும் பலரிடம் கொடுத்து மத்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலுள்ள அருங்காட்சியகத்தில் சேர்த்துப் பாதுகாக்க வேண்டுமெனப் பரிந்துரைத்ததுண்டு.
ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட பீரங்கிக் குண்டுகள் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயிலில் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெரிதும் சிறிதுமான 2 பீரங்கிக் குண்டுகளை காசிம் கண்டெடுத்தார். அதோடு, அரியவகைக் காசுகளையும் கண்டெடுத்துள்ளார். 1750ல் பிரெஞ்சு ஆதிக்கத்தின் போது ஒரே நாணயத்தில் ஒரு பக்கம் ஆங்கிலேய மன்னர்களின் இலச்சினையும், மறுபக்கம் முகமதியர்களின் உருது எழுத்தினான இலச்சினையும் அச்சிடப்பட்ட காசுகள், 1808ம் ஆண்டு கிழக்கிந்தியக் கம்பெனியரால் அச்சிடப்பட்ட காசுகள், விஓசி எனப்படும் வாண்டிமேன் ஓவன்கோவன் பெயரிலான காசுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில ஆண்டுகளாக இவர் சேகரித்து வரும் 50க்கும் மேற்பட்ட தாமிரக்காசுகள் கையிருப்பில் உள்ளன.
காசிம் கூறுகையில், ரஞ்சன்குடியில் அரசு தொடக்கப்பள்ளி வகுப்பறைகளில் 4 கட்டிடங்கள் பயன்படுத்தப்படாமலேயே உள்ளன. இவற்றில் 2 கட்டிடங்களை ஒதுக்கி, அதில் அருங்காட்சியகம் ஒன்றையும், நூலகம் ஒன்றையும் அமைத்துத் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு பெறப்பட்ட அரிய பொருட்கள் வேறெங்கோ முடங்கிக்கிடக்காமல், நமது சந்ததியினர் கண்டுகளிக்க பெரம்பலூரிலேயே வைத்துப் பாதுகாக்க உதவவேண்டும் என்றார்.