தபால்பெட்டிக்குள் 51 பாஸ்போர்ட் சிபிஐ விசாரணை என பரபரப்பு
6/10/2025 2:20:19 PM
சென்னை: சென்னை நங்கநல்லூரில் உள்ள ஒரு தபால் பெட்டியில் கடந்த 5 நாட்களில் 51 பாஸ்போர்ட்கள் கிடைத்தன. இந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரிப்பதாக இன்று காலையில் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை நங்கநல்லூர் 48வது தெருவில் தபால் பெட்டி உள்ளது. இந்த பெட்டியில் விழும் தபால்களை சேகரிக்க தினமும் மாலையில் தபால்துறை ஊழியர் வருவார். கடந்த 2ம் தேதி மாலை தபால் ஊழியர் வந்து தபால்களை எடுத்தபோது, அதில் 23 பாஸ்போர்ட்கள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவற்றை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து, அதே தபால்பெட்டியில் கடந்த 6ம் தேதி மீண்டும் 15 பாஸ்போர்ட்களும், நேற்று மாலையும் 13 பாஸ்போர்ட்களும் கிடந்தன. இதையடுத்து தபால்நிலை அதிகாரி அமிர்தலிங்கம் அளித்த புகாரில் பழவந்தாங்கல் போலீசார் அந்த 51 பாஸ்போர்ட்களை கைப்பற்றி விசாரித்து வந்தனர்.
பழவந்தாங்கல் இன்ஸ்பெக்டர் பலவேசன் அந்த பாஸ்போர்ட்களை, பரங்கிமலை துணை கமிஷனர் கல்யாணிடம் ஒப்படைத்தார். தற்போது, துணை கமிஷனர் கல்யாண் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 23 பாஸ்ேபார்ட்கள் யார் யாருடையது என கண்டுபிடித்தனர். அதில் ஒன்று அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சிறுமியுடையது என்பது தெரியவந்தது.முகவரியை கொண்டு நடத்தி விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள், விமான நிலையத்தில் தங்களது பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக தெரிவித்தனர். இருப்பினும் போலீசாருக்கு இந்த விஷயத்தில் சந்தேகம் வலுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்ட பொருட்களை கடத்தி வரும் கும்பல் போலீசாருக்கு பயந்து இதுபோன்ற தபால் பெட்டிக்குள் பாஸ்போர்ட்களை போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.
மேலும், மண்டல பாஸ்போர்ட் அதிகாரியிடம் போலீசார் தகவல் அளித்து விவரங்களை சேகரித்து வருகின்றனர். பாஸ்போர்ட் அதிகாரிகளும் சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள்தான் அங்கு வந்து விசாரணை நடத்துவதாக தகவல் பரவியது. இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ‘‘சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு பரிந்துரைத்தால் மட்டுமே அவர்கள் விசாரிப்பார்கள். இந்த வழக்கில் முதல்கட்டமாக பாஸ்போர்ட்களில் உள்ள முகவரியை ஆய்வு செய்து உரிமையாளர்களிடம் விசாரித்தோம். பலரும் வெளிநாடு சென்று திரும்பும்போது விமான நிலையத்தில் பாஸ்போர்ட்டை தவற விட்டு விட்டதாக தெரிவித்தனர். வெளிநாடுகளில் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் போலீசாருக்கு பயந்து பாஸ்போர்ட்களை தபால் பெட்டிக்குள் போட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. இருப்பினும் முழு விசாரணைக்கு பின்பே உண்மை நிலவரம் தெரிய
வரும்’’ என்றார்.