போரூர் அருகே பரபரப்பு பிளைவுட் கடை எரிந்து சாம்பல்
6/10/2025 2:19:54 PM
பூந்தமல்லி: போரூர் அருகே பிளைவுட் கடை எரிந்து சாம்பலானது. சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம், ஆற்காடு சாலையில் பிளைவுட், கண்ணாடி கடை உள்ளது. இதை போரூரை சேர்ந்த செந்தில்குமார் (38) நடத்துகிறார். இக்கடையில் 6 பேர் வேலை செய்து வருகின்றனர்.நேற்றிரவு 10 மணியளவில் வியாபாரம் முடிந்து ஊழியர்கள் கடையைப் பூட்டிவிட்டு சென்றனர். இதன்பிறகு கடையில் இருந்து கரும்புகை வந்துக்கொண்டிருந்ததை அக்கம்பக்கத்து கடைக்காரர்கள் பார்த்து செந்தில்குமாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அவர் சம்பவ இடத்துக்கு வந்தார். அப்போது கடையில் தீ எரியத் தொடங்கியது.இதுபற்றி தகவல் கிடைத்ததும் மதுரவாயல், வளசரவாக்கம், பூந்தமல்லி, அசோக்நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வண்டிகளில் 30 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். 2 மணி நேரம் போராடி, கடைக்குள் ஏற்பட்ட தீயை அணைத்தனர். தீயில் எரிந்து சேதமான பொருட்களின் மதிப்பு ₹30 லட்சம் இருக்கும் என தெரிகிறது. இதுகுறித்து வளசரவாக்கம் காவல்நிலையத்தில் செந்தில்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடைக்குள் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.