லாரி மீது கார் மோதி 2 பேர் பரிதாப பலி
6/10/2025 2:19:02 PM
திருச்சி: திருச்சி அருகே இன்று அதிகாலை சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதியதில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.திருச்சி மாவட்டம் மணப்பாறை பெஸ்டோ நகரை சேர்ந்த ராஜகோபால் மகன் பாஸ்கர் (38), மஞ்சப்பட்டி ஆரோக்கியம் தெருவை சேர்ந்த மரிய அருள்ராஜ் மகன் அலெக்ஸ் மிரலாடஸ் (29). சமையல்காரர்களான 2 பேரும், இன்று அதிகாலை திருச்சியில் இருந்து மணப்பாறை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.காரை பாஸ்கர் ஓட்டி சென்றார்.
அப்போது வெள்ளிவாடி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் எதிரே சென்ற போது சாலை யோரத்தில் நின்று கொண்டிருந்த கேஸ் சிலிண்டர் லாரி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மோதிய வேகத்தில் கார் நொறுங்கியது. காரில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.தகவல் அறிந்த இனாம்குளத்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர். பின்னர் விபத்தில் பலியான 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து இனாம்குளத்துார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.