மத்திய பிரதேசத்தில் பரிதாபம்: சாலை விபத்தில் பாஜ எம்எல்ஏ பலி
6/10/2025 2:16:21 PM
போபால்: மத்திய பிரதேசத்தில் சாலை விபத்தில் பாஜ எம்எல்ஏ பலியானார்.மத்திய பிரதேசத்தில் பர்கன்பூர் மாவட்டத்தில் உள்ள நேபாநகர் தொகுதி பாஜ சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ராஜேந்திர தத்து. நேற்று நள்ளிரவு போபால் இந்தூர் நெடுஞ்சாலையில் தனது பாதுகாவலருடன் காரில் சென்று கொண்டிருந்தார். நாளை நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தல் குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இல்லத்தில் நடைபெறும் பாஜ ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராஜேந்திர தத்து சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. காரை அவரது டிரைவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
சேகோர் மாவட்டத்தில் உள்ள ஷேர்புரா என்ற இடத்தின் அருகே வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடியது. பின்னர் சாலையின் ஓரத்தில் உள்ள பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் ராஜேந்திர தத்து உள்ளிட்ட 3 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதில் ராஜேந்திர தத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. காயமடைந்த டிரைவர் மற்றும் பாதுகாவலரை மீட்டு சேகோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராஜேந்திர தத்து இறந்த செய்தியை மாநில அமைச்சரும், செய்தி தொடர்பாளருமான நரோட்டம் மிஸ்ராவும் உறுதி செய்துள்ளார்.
54 வயதான ராஜேந்தர தத்து தனது மனைவி மற்றும் 4 மகள், 1 மகனுடன் வசித்து வந்தார். நேபாநகரில் இரண்டாவது முறையாக பாஜ சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவல் அறிந்த மத்திய பிரதேச பாஜ மாநில தலைவர் நந்த்குமார் சிங் சவுகான் சேகோர் மருத்துவமனைக்கு சென்று அதிகாரிகளிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். ராஜேந்திர தத்து பலியானதைத் தொடர்ந்து பாஜ எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.