குதிரை பேரத்தில் சிக்கிய கர்நாடகாவில் மாநிலங்களவை தேர்தலுக்கு தடையில்லை தலைமை தேர்தல் ஆணையம் முடிவு
6/10/2025 2:15:57 PM
புதுடெல்லி: குதிரை பேரத்தில் சிக்கிய கர்நாடகாவில் மாநிலங்களவை தேர்தலை தள்ளிவைக்க தலைமை தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. அதே சமயம் குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.கர்நாடக மாநிலம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நாளை மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. சில மாநிலங்களில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். காலியாக உள்ள இடங்களை காட்டிலும் கூடுதலாக வேட்பாளர்கள் களத்தில் உள்ள மாநிலங்களில் நாளை தேர்தல் நடக்கிறது. கர்நாடகாவில் காலியாக உள்ள 4 இடங்களுக்கு 5 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் சார்பாக 3 பேரும், எதிர்கட்சிகளான பாஜ மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பாக தலா ஒருவரும் நிறுத்தப்பட்டுள்ளனர். பாஜ வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
காங்கிரசுக்கு இரண்டு இடங்கள் கிடைப்பது உறுதியாகிவிட்டது. எஞ்சிய ஒரு இடத்துக்கு மதசார்பற்ற ஜனதா தளமும், காங்கிரசும் கடுமையாக மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் 14 சுயேட்சகைள் உள்ளனர். இவர்களது ஆதரவை பெறுவதில் குதிரை பேரம் நடப்பதாக அண்மையில் சிடி ஆதாரங்கள் வெளியாயின. சுயேட்சை எம்எல்ஏக்களுடன் ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பேரம் பேசுவது போன்ற காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன. சில சுயேட்சை எம்எல்ஏக்கள் வாக்களிக்க ரூ. 7 கோடிவரை கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதை தொடர்ந்து இங்கு தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் இந்த மாநிலத்தில் நாளை தேர்தல் நடக்குமா என்ற வினா எழுந்தது. இந்நிலையில் இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்திய தலைமை தேர்தல் ஆணையம், தேர்தலை தள்ளிவைக்க வேண்டிய அவசியம் இல்லை என கருத்து தெரிவித்துள்ளது. இதனால் நாளை திட்டமிட்ட படி இங்கு தேர்தல் நடக்கிறது. அதே சமயம இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐயில் புகார் அளிக்கப்படும் எனவும் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.