பெண் சிசு கொலை குறித்து மாணவி பேச்சு கண் கலங்கினார் குஜராத் முதல்வர் ஆனந்திபென்
6/10/2025 2:15:30 PM
அகமதாபாத்: பெண் சிசு கொலை குறித்து பள்ளி மாணவி ஆற்றிய உருக்கமான உரையை கேட்டு குஜராத் முதல்வர் ஆனந்திபென் கண்ணீர் வடித்தார்.குஜராத் மாநிலம், ஹரேஜ் பகுதியில் உள்ள அரசு பள்ளியின் ஆண்டு விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக அம்மாநில முதல்வர் ஆனந்திபென் கலந்து கொண்டார்.விழாவில், 9ம் வகுப்பு படிக்கும் அம்பிகா கோஹெல் என்ற மாணவி, பெண் சிசு கொலை குறித்து பேசினார். ‘தாயின் கருவில் இருக்கும்போதே பெண் சிசு அழிக்கப்படுகிறது. இது மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. சிசு கொலையால் நாடு முழுவதும் பெண்களின் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது’ என உருக்கமாக பேசினார். மேலும், இந்த உலகில் வாழ்வதற்கு அனுமதிக்குமாறு பெண் சிசு ஒன்று தன்னுடைய தாய்க்கு கோரிக்கை வைத்திருப்பது போன்ற கடித்தத்தை மாணவி அம்பிகா வாசித்தார்.
இதை கேட்டு முதல்வர் ஆனந்திபென் உள்ளிட்டோர் கண்கலங்கினர். கண்ணீரை கைக்குட்டையால் முதல்வர் துடைத்துக் கொண்டார். சிறப்பாக பேசி முடித்த மாணவியை பாராட்டிய முதல்வர், அவளை தழுவிக்கொண்டார்.இதையடுத்து, முதல்வர் ஆனந்திபென் பேசுகையில், ‘‘கிராமப்புற மாணவிகள் மிகவும் திறமைசாலிகளாக உள்ளனர். பேச்சுத்திறமையை வளர்த்து கொண்டால் பெரிய அளவில் சாதிக்க முடியும். பெற்றோர்கள் மகன், மகள் என பாகுபாடு பார்க்க கூடாது. பெண் குழந்தைகளை படிக்க அனுமதிக்க வேண்டும். குஜராத்தில் பெண் சிசு கொலையை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். 74 வயதான முதல்வர் ஆனந்திபென் ஆசிரியராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.