ஆதாயம் தரும் பதவி வகிக்கும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் : தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார்
6/10/2025 2:15:05 PM
புதுடெல்லி: டெல்லியில் ஆதாயம் தரும் பதவி வகிக்கும் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 21 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கான் தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் டெல்லியில் 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமைச்சர்களின் சட்டபேரவை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு கார் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் டெல்லி சட்டபேரவை விதிகளின்படி எம்எல்ஏக்களுக்கு இது போன்ற நியமனம் அளிக்கக் கூடாது. ஆதாயம் தரும் பதவி வகிக்கும் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அந்த மனுவில் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் இதுகுறித்து அஜய் மக்கான் கூறுகையில், டெல்லியில் நேற்றும் இன்றும் நடைபெறும் சட்டபேரவை சிறப்பு கூட்டத்திலும் கலந்து கொள்ள இவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1991ம் ஆண்டு டெல்லி சட்டபேரவை சட்டத்தின்படி அமைச்சர்களை தவிர எம்எல்ஏக்கள் யாருக்காவது ஆதாயம் தரும் பதவி வழங்கப்பட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம் என்றும்அவர் தெரிவித்தார். 21 எம்எல்ஏக்களும் சலுகைகளை அனுபவிப்பதுடன், அமைச்சர்களின் முடிவுகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றனர் என்றும் அஜய் மக்கான் குற்றம் சாட்டினார்.