திருப்பதியில் இன்று காலை லட்டு தயாரிக்கும் கட்டிடத்தில் பயங்கர தீ பக்தர்கள் அதிர்ச்சி
6/10/2025 2:14:06 PM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிக்கும் அறையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் ரூ. 20 லட்சம் பொருட்கள் தீயில் கருகி சேதமாயின. இதனால் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.திருப்பதி ஏழுமலையான் கோயில் உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது. இக்கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். விசேஷ நாட்கள், அரசு விடுமுறை நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சுவாமியை தரிசிக்க நாள் கணக்கில் காத்திருக்கின்றனர். இலவச தரிசனம், மலைப்பாதை வழியாக வரும் பக்தர்கள், ரூ.300 கட்டணம் செலுத்தி தரிசனம் என பல்வேறு வகையில் ஏழுமலையனை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இதுதவிர விஐபிக்கள் தரிசன நேரமும் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் சலுகை விலையிலும், வெளி மார்க்கெட் விலையிலும் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த லட்டு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. திருப்பதி வரும் அனைத்து பக்தர்களும் லட்டு பிரசாதம் வாங்க நீண்ட வரிசையில் காத்திருப்பது நாள்தோறும் நடைபெறும் நிகழ்வாகும். பக்தர்களிடம் மிகவும் புகழ் பெற்றுள்ள இந்த லட்டு தயாரிப்பதற்கு கோயில் பகுதியில் தனிக்கட்டிடம் கட்டப்பட்டு லட்டு தயாரிக்கப்படுகிறது. இங்கு தினமும் சுமார் 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்படுகிறது. இதற்கு தேவையான பூந்தி கோயிலுக்கு வெளியே வடக்கு திசையில் உள்ள கட்டிடத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரமான முறையில் பூந்தி தயார் செய்யப்பட்ட பிறகு ஆட்கள் மூலம் கொண்டு வந்தால் காலதாமதம் ஆகும் என்பதால் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு கன்வேயர் பெல்ட் மூலம் லட்டு தயாரிக்கும் அறைக்கு மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டு செல்லப்படுகிறது. தூய்மையான நெய், கடலை மாவு, முந்திரி திராட்சை, கல்கண்டு ஆகியவற்றை சேர்த்து இந்த லட்டு தயாரிக்கப்படுகிறது.பூந்தி, லட்டு தயாரிக்கும் பணியில் 492 பேர் ஈடுபடுகின்றனர். இவர்கள் 3 ஷிப்டுகளில் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் பூந்தி தயாரிக்கும் பணி வழக்கம்போல் நடைபெற்று வந்தது. அப்போது தீயின் வேகம் அதிகரித்ததால் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அந்த அறையில் மேல்பகுதியில் படிந்து இருந்த எண்ணெய் பசையில் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.அப்போது பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அனைவரும் அலறியடித்தபடி வெளியே வந்துவிட்டனர். மேலும் இந்த தீவிபத்து பற்றி தகவலறிந்த பக்தர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக திருப்பதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து காரணமாக லட்டு தயாரிக்க பயன்படும் பாத்திரங்கள், பூந்தி தயாரிக்க வைத்திருந்த நெய் மற்றும் கடலை மாவு, முந்திரி, திராட்சை ஆகியவை தீயில் கருகி சேதமாயின. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாக தெரிகிறது.லட்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் உடனடியாக வெளியேறிவிட்டதால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர்.