சென்னையில் அடுத்தடுத்து கொலை கூலிப்படைகளை ஒடுக்க போலீஸ் அதிரடி திட்டம்
6/10/2025 2:05:00 PM
சென்னை: சென்னையில் அடுத்தடுத்து கொலைகள் நடந்து வருவதால், கூலிப்படைகளை ஒடுக்க போலீஸார் அதிரடி திட்டம் வகுத்துள்ளனர். கூலிப்படைகளாக செயல்படுபவர்களை கண்காணித்து பிடிக்க தனிப்படைகள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவை சேர்ந்தவர் முருகன் (44). ஐகோர்ட் வக்கீல். இவருக்கு லோகேசினி என்ற மனைவியும் 8ம் வகுப்பு படிக்கும் மகன், 3ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளனர். இந்நிலையில், கோடம்பாக்கம் டிரஸ்புரம், 6வது தெருவில் உள்ள வாடகை வீட்டை பார்ப்பதற்காக சென்ற முருகன் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தீவிர விசாரணை நடத்தியதில் மனைவியே கள்ளக்காதலன் மூலம், கூலிப்பைடையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.
இது குறித்து கோடம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி, வியாசர்பாடியை சேர்ந்த சுப்பு (36), சுப்ரமணி (23), முரளி (27) ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பணத்துக்காக கூலிப்படையாக செயல்பட்டு முருகனை கொலை செய்தது தெரியவந்தது. இந்த 3 ரவுடிகள் இதற்கு முன் எந்த கொலை சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை. இப்போதுதான் முதல் முறையாக கொலை செய்து சிக்கியுள்ளனர். மேலும் இவர்கள் பெரிய அளவில் பணத்துக்காக கொலை செய்யவில்லை. இரவு மது அருந்துவதற்கும், நன்றாக சாப்பிடுவதற்காகவும் ஒரு லட்சம் மட்டுமே கூலி பேசி கொலையை செய்துள்ளனர்.
அதேபோல, கீழ்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஜன்மய்யா ரோடு பகுதியை சேர்ந்தவர் பரஸ்மல் ஜவன்ராஜ் (59). பூக்கடையில் பைனான்ஸ் கடை நடத்தி வந்த இவர் சில தினங்களுக்கு முன் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளியை பிடிக்க 4 தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்து வந்தனர். இவரும் கூலிப்படை மூலமே கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்தநிலையில், பைனான்சியர் கொலையில் கூலிப்படையைச் சேர்ந்த 3 பேர் நேற்று இரவு சென்னையில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் தங்கசாலை பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களை பணத்துக்காக ஏற்பாடு செய்தவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரைப் பிடித்தால்தான் கூலிப்படை மூலம் கொலை செய்ததற்கான காரணம் தெரியவரும்.
சென்னையில் கூலிப்படைகளை ஏவி அடுத்தடுத்து 2 கொலைகள் நடந்த சம்பவம் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியது. இதனால் சென்னையில் ரவுடிகள் மற்றும் கூலிப்படையாக செயல்படுபவர்களை பிடிப்பது குறித்து போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பிறகு கூடுதல் கமிஷனர்கள் வரதராஜன், அபய்குமார் சிங், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோரது தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
முன்பெல்லாம் கூலிப்படைக்கு ஒரு தலைவன் இருப்பான். அவனிடம் பணத்தைக் கொடுத்தால் திட்டமிட்டு கொலை செய்வார்கள். ஆனால் சமீபத்தில் சென்னையில் நடந்த 2 கொலைகளை செய்தவர்கள் அது போன்ற கூலிப்படைகள் அல்ல. மது போதை மற்றும் ஜாலியாக இருக்க ஆசைப்பட்டு கொலைகைள செய்துள்ளனர். இதனால் சிறிய ரவுடிகள் முதல் பெரிய ரவுடிகள் வரை அனைவரையும் முற்றிலும் ஒடுக்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் முதல் இப்போது வரை சுமார் 400 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்போது சிறிய சிறிய வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் முதல் பெரிய ரவுடிகள் வரை பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் சுமார் 3 ஆயிரம் பேர் இடம்பெற்றுள்ளனர். அவர்களை கண்காணிக்கவும், சிறு வழக்கில் சிக்கினாலும் சிறையில் அடைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருப்பவர்களையும் பிடிக்க தனிப்படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.