தென் மேற்கு பருவமழை தீவிரம் குமரியில் விடிய விடிய கொட்டியது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
6/10/2025 2:04:27 PM
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தென்ேமற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று இரவு முதல் பலத்த சூறை காற்றுடன் விடிய, விடிய கன மழை பெய்தது. இந்த மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.தமிழகம் மற்றும் கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
தொடர் மழை காரணமாக வறண்டு கிடந்த கால்வாய்கள், குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது. ஆறுகளிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மாவட்டத்தில் மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கன மழை பெய்து வருவதால் அணைகளுக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகள் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. கடலோர பகுதிகளிலும் பலத்த மழை மற்றும் சூறை காற்று காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. கடலோர பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். பெரும்பாலான கிராமங்களில் இன்று 2 வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை.
இந்த நிலையில் நேற்று மாலையில் இருந்து இடைவிடாமல் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சூறை காற்றும் வீசி வருகிறது. இந்த மழையால் குழித்துறை தாமிரபரணி, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாகர்கோவில், மார்த்தாண்டம் பகுதிகளில் சாலைகள் தண்ணீரில் மூழ்கியதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது.இடைவிடாது பெய்து வரும் மழையால், குமரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவிட்டார்.
இதன் காரணமாக காலையில் பள்ளிகளுக்கு வந்த மாணவ, மாணவிகள் திரும்பி சென்றனர். பலத்த மழையால் பல இடங்களில் சாலைகள் தண்ணீரில் மூழ்கின. பலத்த காற்று காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. ரப்பர் பால் வெட்டும் தொழில், செங்கல் சூளை தொழில், கட்டிட தொழில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. சூறை காற்று காரணமாக கன்னியாகுமரியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. இதனால் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கான படகு சேவை இன்று காலை ரத்து செய்யப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.