காங்கிரசை விமர்சிப்பதை நிறுத்தி விட்டு தேர்தலில் டெபாசிட் வாங்க பாஜ முயற்சிக்க வேண்டும் தமிழிசைக்கு இளங்கோவன் பதில்
6/9/2025 4:04:25 PM
காஞ்சிபுரம்: தமிழகத்தில் காங்கிரசை விமர்சிப்பதை நிறுத்தி விட்டு, பாஜ டெபாசிட் வாங்க தமிழிசை முயற்சிக்க வேண்டும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.சென்னை காங்கிரஸ் பிரமுகரான ஐஓசி பாலு (எ) பாலகுமார்-சசிகலா தம்பதியரின் மகள் வேதா, பிஎஸ்.சரவணன்-மஞ்சுளா தம்பதியரின் மகன் அஸ்வின் ஆகியோரது திருமணம் காஞ்சிபுரத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக பாஜ தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், என்னை பற்றியும், தமிழக காங்கிரசை பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார். முதலில் பாஜ, தமிழகம் முழுவதும் டெபாசிட் வாங்கும் முயற்சியை அவர் எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரை சந்திக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. தமிழக நலன் குறித்து அவர்கள் விவாதிப்பார்களா அல்லது தனிப்பட்ட சந்திப்பா? எதுவாக இருந்தாலும், முதலில் பிரதமர் இந்தியாவில் இருக்கிறாரா? என்பதை உறுதி செய்து விட்டு டெல்லிக்கு செல்லட்டும். திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். அந்த கூட்டணியுடன்தான், உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார். இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் சிவராமன், வக்கீல் சுந்தரமூர்த்தி, எம்எல்ஏக்கள் தா.மோ.அன்பரசன், க.சுந்தர், வக்கீல் எழிலரசன், காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்.பிராண்ட் ஆறுமுகம் மற்றும் வி.எஸ்.ராமகிருஷ்ணன், காஞ்சிபுரம் காங்கிரஸ் நகர தலைவர் ஆர்.வி.குப்பன், வட்டார தலைவர் அவலூர் சீனிவாசன், எஸ்சிஎஸ்டி மாவட்ட தலைவர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.