மனைவியை கொன்று தலைமறைவு செல்பியால் சிக்கியவர் சிறையில் அடைப்பு
6/9/2025 2:43:12 PM
அரியலூர்: அரியலூரில் மனைவியை கொன்று 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் செல்பி போட்டோவால் போலீசில் சிக்கினார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அரியலூர் மாவட்டம், நிண்ணியூரை சேர்ந்தவர் மணி (45). இவரது மனைவி விஜயலட்சுமி. வெளிநாட்டில் வேலை செய்து வந்த மணி, 2009ல் ஊர் திரும்பினார். மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த மணி, அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். 2009 ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட தகராறில் கழுத்து அறுத்து மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவானார். அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசாமியை தேடி வந்தனர்.
இதற்கிடையே சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் மணி கடந்த 3 வருடமாக சர்வராக விஜயகுமார் என்ற பெயரில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஓட்டலில் வேலை செய்த தினேஷ் என்ற நண்பருடன் ஒரே அறையில் தங்கியுள்ளார். அவ்வப்போது தினேஷ் செல்பி எடுப்பது வழக்கமாம். செல்பி எடுத்து பேஸ்புக்கில் தினேஷ் போட்டுள்ளார்.
இந்தப்பதிவை அரியலூரில் உள்ள விஜயகுமாரின் உறவினர்கள் பார்த்து, சென்னை புது வண்ணாரப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று மணியை கைது செய்து, அரியலூர் போலீசாருக்கு தெரிவித்தனர். அரியலூர் டிஎஸ்பி முத்துக்கருப்பன் உத்தரவின் பேரில் செந்துறை இன்ஸ்பெக்டர் ஜெபராஜ் தலைமையில் சென்னை சென்ற போலீசார் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீசாரின் அனுமதி பெற்று மணியை கைது செய்து செந்துறை காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
'