இளம்பெண் குளிப்பதை படம் எடுத்து நெட்’டில் பரவவிட்ட வாலிபர் கொலை : கணவர் உள்பட 2 பேர் கைது
6/9/2025 2:41:49 PM
பாகூர்: இளம்பெண் குளிப்பதை படம் எடுத்து இணையதளத்தில் பரவவிட்ட வாலிபரை கடத்திக்கொலை செய்த பெண்ணின் கணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அடுத்துள்ள பனித்திட்டு நடுத்தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகன் கவாஸ்கர் (29). இவர் கடந்த 12 ஆண்டுகளாக சென்னை ராயபுரம், கிழக்கு மாதாகோயில் தெருவில் உள்ள பாட்டி பட்டு வீட்டில் தங்கி படித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த கவாஸ்கர் பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் ஓட்டலில் வேலை செய்து வந்தார். கடந்த 25ம் தேதி அதிகாலை வெள்ளை நிற காரில் வந்த சிலர், கவாஸ்கரை அழைத்து சென்றனர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசில் தனது மகன் கடத்தப்பட்டதாக கலியமூர்த்தி புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் கலையரசு மற்றும் கலியபெருமாள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர் .
இதில் சென்னை ராயபுரத்தை சேர்ந்த அன்பு(43), அவரது சித்தி மகள் நந்தினி, மாமன் புகழேந்தி மற்றும் கார்த்தி(25) ஆகியோர் கவாஸ்கரை கடத்தியது தெரியவந்தது. மேலும் போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு தலைமறைவாகிவிட்டதும் தெரிந்தது. இந்நிலையில் அன்பு மற்றும் கார்த்தி ஆகியோரை புதுவை வீராம்பட்டினத்தில் நேற்று மாலை கைது செய்து விசாரித்தனர். அதில், நான்கு பேரும் சேர்ந்து மகாபலிபுரம், நெமிலி அருகே காவாஸ்கரை கொலை செய்து ஒரு மரத்தில் கட்டி தொங்கவிட்டதாக ஒப்புக்கொண்டனர். இதை தொடர்ந்து கவாஸ்கரின் உடலை போலீசார் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:கவாஸ்கர் சென்னையில் பாட்டி வீட்டில் தங்கியிருந்தபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் அன்புவின் குடும்பத்தினரிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது, அன்புவின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதனை அவர் கண்டித்துள்ளார். மேலும் அன்பு மனைவி குளிக்கும்போது செல்போனில் படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. அன்பு கண்டித்ததால் கவாஸ்கர் புதுவை பனித்திட்டுக்கு வந்து தனியார் ஓட்டலில் வேலை பார்த்துள்ளார். ஆனால் பேஸ்புக்கில் ஆபாச படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அன்புவின் குடும்பத்தினர் கடந்த 25ம் தேதி கவாஸ்கரை கடத்தி கொலை செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள அன்பு மற்றும் கார்த்தி ஆகியோர் புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள நந்தினி மற்றும் புகழேந்தியை போலீசார் தேடி வருகின்றனர்.