பிரசாத், சந்துவும் விண்ணப்பம் இந்திய அணியின் பயிற்சியாளா் பதவிக்கு கடும் போட்டி ரவி சாஸ்திரிக்கே அதிக வாய்ப்பு
6/9/2025 2:39:14 PM
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக இருந்த ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் டி.20 உலக கோப்பையுடன் முடிவடைந்த நிலையில், புதிய பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என கடந்த வாரம் பிசிசிஐ விளம்பரம் வெளியிட்டது. இதையடுத்து ரவிசாஸ்திரி, தற்போது தேர்வு குழு தலைவராக உள்ள சந்தீப்பட்டேல் ஆகியோர் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், முன்னாள் மிதவேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ்பிரசாத்தும் விண்ணப்பித்துள்ளார். பிரசாத் இதற்கு முன் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்துள்ளார். இந்த காலகட்டத்தில் தான் இந்திய அணி டி.20 உலக கோப்பையை வென்றது. இந்திய அணிக்காக 33 டெஸ்ட் மற்றும் 161 ஒருநாள் போட்டிகளில் ஆடி உள்ள பிரசாத் 292 விக்கெட் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கும் பிரசாத் பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார்.
இதேபோல் முன்னாள் மிதவேகப்பந்து வீச்சாளர் பல்விந்தர்சிங் சந்துவும் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார். 1983ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பல்விந்தர் சிங் சந்து இந்திய அணிக்காக 8 டெஸ்ட், 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மும்பை , மத்திய பிரதேசம், பரோடோ ஆகிய ரஞ்சி அணிகளுக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். பயிற்சியாளர் பதவிக்கு இதுவரை 4பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் ரவிசாஸ்திரிக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.