நாளை இறுதி சடங்கு முகமது அலி சொந்த ஊரில் ரசிகர்கள் குவிந்தனர் 1 மணி நேரத்தில் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தது
6/9/2025 2:38:25 PM
லூயிஸ்வில்லி: மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவானான அமெரிக்காவை சேர்ந்த முகமது அலியின் இறுதி சடங்கு, கென்டகி மாகாணத்தில் உள்ள அவரது சொந்த ஊரானா லூயிஸ்வில்லியில் நாளை நடைபெறுகிறது. இதில், பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்களும் லூயிஸ்வில்லியில் குவிந்து வருகின்றனர். அங்குள்ள கேஎப்சி சென்டரில், பொது மக்களின் அஞ்சலிக்காக முகமது அலியின் உடல் நாளை வைக்கப்படுகிறது. இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில், இறுதி நிகழ்ச்சியாக இது திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை பெற நேற்று கேஎப்சி சென்டரில் ரசிகர்கள் குவிந்தனர். 1 மணி நேரம் 10 நிமிடங்களில் 15 ஆயிரம் டிக்கெட்டுகள் தீர்ந்து போயின.
டிக்கெட் வாங்குவதற்காக இங்கிலாந்தில் இருந்து வந்திருந்த ஜார்ஜ் நீல்சன் கூறுகையில், அதிகாலை 5 மணியில் இருந்து காத்திருக்கிறேன். ஆனால் இந்த காத்திருப்பில் அர்த்தம் உள்ளது. முகமது அலி என்னுடைய ரோல் மாடல். அவர் எனது ஹீரோ என்றார். டெக்சாசில் இருந்து வந்திருந்த பாப் ஆண்ட்ரிடா கூறுகையில், முகமது அலி உயிருடன் இருக்கும்போது, அவரை நான் சந்தித்தது இல்லை. அவரது இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புகிறேன் என்றார். இதனிடையே முகமது அலி இறுதி சடங்கில், வீடியோ கேமராக்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வளர்ப்பு பிராணிகளை அழைத்து வரவும், செல்பி ஸ்டிக்களை கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முகமது அலியின் சிந்தனைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் விதமாக, லூயிஸ்வில்லியில் ஐ யம் அலி என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டனர். தனது 2 மகன்களுடன் இதில் கலந்து கொண்ட கிரேக் டேவிட்சன் கூறுகையில், முகமது அலியின் சண்டைகளை பார்த்துதான் நான் வளர்ந்தேன். வியட்நாம் போரின் போது, அவரது நிலைப்பாட்டை நான் தெரிந்து கொண்டேன். அவரை பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.