உலக சாம்பியனை வீழ்த்தி அபாரம் 47 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி
6/8/2025 2:46:10 PM
கயானா: வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3வது லீக் ஆட்டம் நேற்று இரவு நடந்தது. ஆஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா மோதிய இந்த ஆட்டத்தில் டாஸ்வென்ற டிவில்லியர்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து டிகாக்-ஆம்லா பேட்டிங்கை தொடங்கினர். டிகாக் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ரோசோவ் 7 ரன்னில் வெளியேற 35 ரன் எடுத்த ஆம்லா ரன் அவுட் ஆனார். கேப்டன் டிவில்லியர்ஸ் 22, டுமினி 13, பர்னல் 2, பாங்கிசோ 9 ரன்னில் வெளியேறினர். தனி ஆளாக போராடிய பெகார்டியன் 62 ரன் (82 பந்து, 4பவுண்டரி, ஒரு சிக்சர்) அடித்தார். 50 ஓவரில் தென்ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழந்து 189 ரன் எடுத்தது. ஆஸி. தரப்பில் ஹேசல்வுட் , கோல்டர் நைல், மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
190 ரன் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் வார்னர் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த கவாஜா 2, கேப்டன் ஸ்மித் 8, மேக்ஸ்வெல் 3, மார்ஷ் 8, மேத்யூ வேட் 2 ரன்னில் ஆட்டம் இழந்தனர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ஆரோன்பிஞ்ச் 72 ரன் (103 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தார். அவருக்கு ஒத்துழைப்பு வழங்கிய லியான் 30 ரன் (31 பந்து) அடித்தார். இருப்பினும் ஆஸி. அணி 34.2 ஓவரில் 142 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 47 ரன் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. தெ.ஆ. தரப்பில் ரபாடா 3, பர்னல், தாகீர், பாங்கிசோ தலா 2 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றி மூலம் போனஸ் புள்ளியுடன் தெ.ஆ. 5 புள்ளி பெற்றது. தெ.ஆ.வின் பெகார்டியன் ஆட்டநாயகன் விருது பெற்றார். வரும் 11ம் தேதி நடைபெறும் 4வது லீக் போட்டியில் இரு அணிகளும் மீண்டும் மோதுகின்றன.