கோபா அமெரிக்கா கால்பந்து கோஸ்டாரிகாவை வீழ்த்தியது அமெரிக்கா
6/8/2025 2:45:48 PM
சிகாகோ: கோபா அமெரிக்கா கால்பந்து தொடர், அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு சிகாகோவில் நடந்த லீக் போட்டி ஒன்றில், அமெரிக்கா-கோஸ்டாரிகா அணிகள் மோதின.ஆட்டம் துவங்கியது முதலே அமெரிக்க வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 8வது நிமிடத்தில் டெம்ப்சி, 37வது நிமிடத்தில் ஜோன்ஸ், 41வது நிமிடத்தில் வுட் ஆகிய அமெரிக்க வீரர்கள் அடுத்தடுத்து வரிசையாக கோல் அடிக்க, முதல் பாதியில் 3-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா முன்னிலை பெற்றது. 2வது பாதியில், 86வது நிமிடத்தில் ஜுஸி மீண்டும் ஒரு கோல் அடிக்க, அமெரிக்கா 4-0 என வலுவான முன்னிலை பெற்றது. பதில் கோல் அடிக்க கோஸ்டா ரிகா வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனிக்கவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 4-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா எளிய வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் கொலம்பியாவிடம் தோல்வியை சந்தித்திருந்த அமெரிக்கா, தனது முதல் வெற்றியை பதிவு செய்து, 3 புள்ளிகளை பெற்றது.