ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்
5/26/2016 2:21:22 PM
புதுடெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் அவர் கவர்னராக தொடர்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை ரகுராம் ராஜன் நேற்று சந்தித்தார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் பதவியேற்றார். இவருடைய பதவிக்காலம் வருகிற செப்டம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், 2வது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை ரகுராம் ராஜன் தொடர்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வரிவிதிப்பு உள்ளிட்ட விஷயங்கள் மாற்றங்களில் கொண்டுவந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்துள்ளதாக ரகுராம் ராஜனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரகுராம் ராஜனை மீண்டும் பதவியில் அமர்த்த கூடாது என பாஜ மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்துள்ள ரகுராம் ராஜன் தேசபக்தி இல்லாதவர்; அவர் முழுமையான இந்தியர் கிடையாது என சுப்பிரமணியசாமி விமர்சனம் செய்திருந்தார்.
ரிசர்வ் வங்கி கவர்னரை நியமிக்கும் முன்பு நன்கு ஆலோசனை செய்து முடிவுக்குவர வேண்டும் என்று பிரதமருக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். சுப்பிரமணியசாமி எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், ரகுராம் ராஜனை மீண்டும் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதற்காக கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. ரகுராம் ராஜனுக்கு ஆதரவாக சுமார் 50 ஆயிரம் பேர் வரை கையெழுத்திட்டுள்ளனர். இதுகுறித்து அவர் ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், ‘‘ரகுராம் ராஜன் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். சர்வதேச அளவில் பொருளாதாரம் சரிந்துவரும் நிலையிலும், இந்தியாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாதவகையில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்துள்ளார். பொருளாதார வளர்ச்சியில் அவருடைய பங்கு மிகவும் முக்கியமானது’’ என்றார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று ரகுராம் ராஜன் சந்தித்தார். முன்னதாக, நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து, ரிசர்வ் வங்கி சார்பில் கொண்டுவரப்படும் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பரபரப்பான சூழலில் பிரதமர் மோடியை, ரகுராம் ராஜன் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.