பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் எளிதான வெற்றி
5/25/2016 5:07:23 PM
பாரிஸ்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ், 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தனது முதல் சுற்றில், ஸ்லோவோகியாவின் மக்டலனா ரைபரிகோவாவை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 6-2, 6-0 என நேர் செட்களில் எளிதாக வென்ற செரீனா வில்லியம்ஸ், 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
வெற்றி பெற அதிக நேரத்தை செரீனா வில்லியம்ஸ் எடுத்து கொள்ளவில்லை. இந்த போட்டி வெறும் 42 நிமிடங்கள் மட்டுமே நடந்தது. இதுவரை 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ், தனது 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை எதிர்நோக்கி விளையாடி வருகிறார். பிரெஞ்ச் ஓபன் நடப்பு சாம்பியனான அவர் மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் பட்சத்தில், அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஸ்டெபி கிராபின் சாதனையை (22 முறை) சமன் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 2வது சுற்றில் பிரேசிலின் பெரிரா அல்லது பிளிஸ்கோவாவை செரீனா எதிர்கொள்ள உள்ளார்.