பெரியாறு அணையை மத்திய குழு ஆய்வு: 152 அடி உயர்த்த நடவடிக்கை?
5/25/2016 5:00:50 PM
கூடலூர்: பெரியாறு அணையை மத்திய குழு 27ம் தேதி ஆய்வு செய்வதால் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் என்.ஏ.வி.நாதன் தலைமையில் மூவர் கொண்ட கண்காணிப்பு குழு மற்றும் இக்குழுவிற்கு உதவியாக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் அம்பர்ஜி ஹாரிஷ் கிரீஷ் தலைமையில் துணைக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் கடந்த ஆண்டு நவம்பர் 28, 29ல் பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினர். ஐந்து மாதங்களுக்கு பிறகு மீண்டும் நாளை மறுதினம் பெரியாறு அணையில் ஆய்வு நடத்த உள்ளனர். இதன்பிறகு குமுளியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள ஜெயலலிதா, தனது தேர்தல் அறிக்கையில் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆட்சிக்கு வந்தால் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டப்படும் என்று கேரளாவில் இடதுசாரி முன்னணியினர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். எனவே துணைக்குழுவின் இந்த ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டம், முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தமிழக விவசாயிகள் கருதுகின்றனர். இதனிடையே பேபி அணையை பலப்படுத்தும் முயற்சியில் 22 மரங்களை வெட்ட தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது. இந்த மரங்களில் தற்போது நம்பர் போடும் பணி துவங்கி உள்ளது. எனவே, பேபி அணை சீரமைப்பு பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இைத பலப்படுத்தி விட்டு பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் வரை தேக்கி வைக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.