தமிழகத்தில் முடிந்து கேரளாவில் துவங்குகிறது மீன்பிடி தடைக்காலம்
5/25/2016 3:46:15 PM
கோவை : தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் இம்மாதத்தில் முடிந்தாலும், அடுத்த மாதம் கேரளாவில் துவங்குகிறது. தமிழகத்தில் மீன் இனப்பெருக்கத்திற்காக 45 நாட்கள் மீன்பிடி தடை காலம் கடந்த ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் துவங்கியது. இதனால் தமிழகத்திலுள்ள அனைத்து மீன் மொத்த விற்பனை மையங்களுக்கு தமிழக கடற்கரை பகுதிகளில் இருந்து வர வேண்டிய மீன்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வரவில்லை. எனினும் பெரும்பாலான மீன் வகைகள் கேரளா, ஒடிசா மற்றும் கர்நாடகா பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டது. இம்மாதத்துடன் தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் முடியவுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன் வரத்து இயல்பு நிலைக்கு திரும்பும். எனினும் கேரளாவில் அடுத்த மாதம் மீன் பிடி தடை காலம் துவங்குகிறது. இதனால் கோவைக்கு மீன் வரத்து குறையும் நிலை ஏற்படும்.
இது குறித்து கோவை உக்கடம் மொத்த மீன் விற்பனையாளர்கள் கூறுகையில், ‘உக்கடத்தில் உள்ள மொத்த மீன் விற்பனை மையத்திற்கு தினசரி சராசரியாக 40 டன் வரை கடல் மீன்கள் வரத்து நிலவும். தமிழகத்தில் மீன் பிடி தடையால், பிற மாநிலங்களில் இருந்து தினசரி 20 டன் கடல் மீன்கள் மட்டுமே வருகிறது. தமிழகத்தில் நீங்கினாலும், கேரளாவில் துவங்குவதால் தமிழகத்தின் வரத்து போதுமான அளவில் இருக்காது. கேரளாவில் மீன்பிடி தடை காலம் நீங்கினால் தான் கோவைக்கு வரத்து சீராகும். அதுவரை விலையிலும் மாற்றம் இருக்காது என்றனர்.