2011ல் மரியம்பிச்சை, இன்று சீனிவேல் பதவி ஏற்கும் முன்பு இறந்த அதிமுக எம்எல்ஏக்கள்
5/25/2016 3:45:00 PM
திருச்சி : கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு விழா அன்று அமைச்சராக இருந்த மரியம்பிச்சை இறந்தார். இதுபோல் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு அன்று அக்கட்சி எம்எல்ஏ சீனிவேல் இறந்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற மரியம்பிச்சைக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து மே 23ம் தேதி எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு விழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக மரியம்பிச்சை திருச்சியிலிருந்து சென்னைக்கு காரில் வந்தபோது விபத்தில் சிக்கி, மரியம்பிச்சை இறந்தார்.
இதைப்போல் இந்த சட்டப்பேரவை தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சீனிவேல் வெற்றிப்பெற்றார். ஆனால் சீனிவேலுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை சீனிவேல் இறந்தார். கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு விழாவின்போது திருச்சி மேற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ மரியம்பிச்சை இறந்தது போல், இந்த தேர்தலில் வெற்றிப்பெற்ற எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு விழா நடைபெறும் இன்று திருப்பரங்குன்றம் அதிமுக எம்எல்ஏ இறந்துள்ளார். இது அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.