மருத்துவ நுழைவுத் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
5/25/2016 3:43:15 PM
சென்னை: மருத்துவப்படிப்பில் சேர இந்த ஆண்டு மட்டும் தேசிய தகுதி நுழைவு தேர்வு (என்இஇடி) கிடையாது என்று அவசர சட்டம் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழகத்தில் இந்த நுழைவுத்தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த ஆண்டு மட்டும் தேசிய தகுதி நுழைவு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க அவசர சட்டம் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2005ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு, மருத்துவ கல்லூரி அட்மிஷனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று நான் ஏற்கனவே தங்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
அதுமட்டுமின்றி இந்த விஷயத்தில் தமிழக அரசு கவனமாக செயல்பட்டு சில நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்துள்ளது. இந்நிலையில், தேசிய தகுதி நுழைவு தேர்வை அறிமுகப்படுத்துவது மாநிலங்களின் உரிமையை நேரடியாக பறிப்பது போல் உள்ளது. மேலும் இது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இத்தேர்வினால் கிராமப்புற மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் அவர்களுக்கு போதுமான பயிற்சி மையங்களோ, பாட சம்பந்தமான விளக்கங்களோ கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. மேலும் இந்த நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது சமூக நீதிக்கு எதிரான செயலாகும்.
எனவே தமிழகத்தில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளுக்கு தற்போது உள்ள முறையையே பின்பற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.