சோனியாவுக்கு விசுவாசமாக இருப்போம் ஸ்டாம்ப் பேப்பரில் எம்எல்ஏக்கள் உறுதிமொழி
5/25/2016 3:37:57 PM
கொல்கத்தா:சோனியா காந்தி மற்றும் ராகுலுக்கு விசுவாசமாக இருப்போம் என மேற்கு வங்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ரூ.100 ஸ்டாம்ப் பேப்பரில் உறுதி மொழி அளித்துள்ளனர்.மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த மாநிலத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வந்த இடதுசாரி கூட்டணி 32 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததே படுதோல்விக்கு காரணம் என ஒரு சில இடது சாரி தலைவர்கள் மேலிடத்தை விமா்சிக்க தொடங்கியுள்ளனர். இருப்பினும் இந்த கூட்டணி தொடரும் என இரண்டு கட்சிகளும் அறிவித்துள்ளன. நாளை மறுநாள் மாநில முதல்வராக திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி பதவியேற்க இருக்கிறார். இந்த விழாவை புறக்கணிக்க போவதாக காங்கிரசும், இடதுசாரிகளும் கூட்டாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் கட்சி தாவலை தடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ரூ. 100 ஸ்டாம்ப் பேப்பரில் காங்கிரஸ் மேலிடத்துக்கு விசுவாசமாக இருப்போம் என உறுதி மொழி பத்திரம் எழுதி கொடுத்துள்ளனர். சோனியாவுக்கும், ராகுல்காந்திக்கும் எப்போதும் விசுவாசமாக இருப்போம், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம், கட்சி கட்டளையை மதித்து நடப்போம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சவுத்ரி கூறுகையில், உறுதி மொழி பத்திரம் அளிக்குமாறு எந்த எம்எல்ஏவையும் கட்டாயப்படுத்தவில்லை. அவர்களாகவே இந்த உறுதி மொழி பத்திரத்தை அளித்துள்ளனர் என்றார்.