ரவுடி கும்பல் அரிவாள் தாக்குதல் 4 பேர் சிறையில் அடைப்பு
5/23/2016 3:09:57 PM
பெரம்பூர்: சென்னை வியாசர்பாடியில் நேற்று முன்தினம் இரவு 3 பேர் கொண்ட கும்பல் போதையில் மோட்டார் பைக்கில் அரிவாளுடன் எஸ்எம்.நகர், மல்லிப்பூ காலனி, லேபர் நகர், முல்லை நகர், சாமந்திப் பூ காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலையில் நடந்து சென்றவர்களை தாறுமாறாக வெட்டினர்.இதில் எஸ்எம்.நகரை சேர்ந்த பிரகலாதன் (17), ஜி.கல்யாணபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (18), லேபர் நகரை சேர்ந்த வேலு (35), மல்லிப்பூ காலனியை சேர்ந்த புருஷோத்தமன் (38), சாமந்திபூ காலனியை சேர்ந்த சந்திரன் (38), வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முனியாண்டி (22) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜி.கல்யாணபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தினேஷ்குமார் (22), அதே பகுதியை சேர்ந்த அருண் (22), தென்னரசு (23) ஆகிய 3 பேரை வண்ணாரப்பேட்டையில் கைது செய்து விசாரித்தனர்.போலீஸ் விசாரணையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் வியாசர்பாடி, சாமந்திப்பூ காலனியை சேர்ந்த ராசி கமல் என்ற ரவுடிக்கும் தினேஷ்குமாருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ராசிகமலை தினேஷ்குமார் வெட்டிவிட்டான். இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராசிகமல் தனது நண்பர் கிஷோர் என்பவருடன் தினேஷ்குமார் மீது பதிலடி தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தான்.
பின்னர் சிறிது நாட்கள் கழித்து ராசிகமல் சிகிச்சை முடிந்து வெளியேறி, ஜி.கல்யாணபுரத்தில் வைத்து தினேஷ்குமாரை அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது தினேஷ்குமார் தப்பிச் செல்லவே, அவரது கூட்டாளி கோகுல்நாத் மீது சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், வியாசர்பாடியில் உள்ள ராசிகமலை வெட்டுவதற்காக நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமார், தனது கூட்டாளிகளான அருண் மற்றும் தென்னரசு ஆகியோருடன் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். அவர் கிடைக்காத ஆத்திரத்தில், சாலையில் சென்ற மக்கள் மீது அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளார் எனத் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து தினேஷ்குமார், அருண், தென்னரசு மற்றும் ராசிகமலின் கூட்டாளியான கிஷோர் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து, இன்று காலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.