தேர்தல் தோல்வி எதிரொலி பாமகவினர் 50 பேர் மொட்டை
5/21/2016 12:26:56 PM
செய்யாறு: செய்யாறு அருகே சட்டமன்ற தேர்தலில் பாமக தோல்வி எதிரொலியாக பாமகவினர் 50 பேர் மொட்டை அடித்து கொண்டனர்.தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் முதல்வர் வேட்பாளராக அன்புமணியை முன்நிறுத்தி 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அன்புமணி மற்றும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள் சுமார் 10 மாதங்களாக சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் அன்புமணி உள்பட அனைத்து பாமக வேட்பாளர்களும் படுதோல்வி அடைந்தனர். இந்த முடிவை சற்றும் எதிர்பார்க்காத பாமகவினர் தோல்வியால் விரக்தி அடைந்தனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த பாமகவினர் பெருமாள், குமரன், முருகன், முனுசாமி, சக்கரபாணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பாமக தேர்தல் தோல்வி காரணமாக நேற்று அங்குள்ள முருகன் கோயில் மரத்தடியில் மொட்டை அடித்துக்கொண்டு தங்களின் ஆதங்கத்தை வெளிபடுத்தினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.