திருத்தணி, திருவாலங்காட்டில் விடுபட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை
5/21/2016 12:24:25 PM
திருத்தணி: தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திருத்தணி, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.இப்பகுதிகளில் முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும், ஒரு பகுதி பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. பாதிக்கப்பட்ட வீடுகளின் கணக்கு விவரங்களை வருவாய் துறையினரும் அரசு ஊழியர்களும் கணக்கெடுத்து தமிழக அரசுக்கு வழங்கினர்.
இதேபோல், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழி ஆகிய கால்நடைகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இப்பகுதிகளில் நிவாரணம் வழங்கும் பணியை வருவாய் துறையினர் நிறுத்திவிட்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தேர்தலுக்குப் பின் நிவாரணம் வழங்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். இதையடுத்து விடுபட்டவர்களுக்கு மீண்டும் வெள்ள நிவாரணத் தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.இதுகுறித்து மாவட்ட கலெக்டரும் வருவாய் துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து, விடுபட்ட நிவாரணத் தொகைகளை வழங்க வேண்டும் என்று இப்பகுதிகளை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.