பாசக்கார கன்றுக்குட்டி... குடும்பத்தினர் நெகிழ்ச்சி
5/21/2016 12:14:45 PM
முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஒரு கன்றுக்குட்டி அதிக பாசத்துடன் எஜமானர் வீட்டில் வலம் வருகிறது. பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிச்சுமணி. வீட்டில் ஆடு, மாடு, நாய்கள் போன்ற வளர்ப்பு பிராணிகளை வளர்த்து வருகிறார். அவர் வளர்க்கும் கன்றுக்குட்டி ஒன்று அவரது குடும்பத்தினருடனும் உறவாடி விளையாடுவது ஆச்சரியமாக உள்ளது. வீட்டின் மாடியில் பிச்சுமணி குடும்பத்தினரும், வீட்டின் கீழ்பகுதியில் அவரது பெற்றோரும் வசித்து வருகின்றனர். தினமும் கன்றுக்குட்டி, வீட்டு மாடிப்படி ஏறி சென்று பிச்சுமணி குடும்பத்தினரை கதவில் முட்டி எழுந்திருக்க வைக்கிறது. பின்னர் வீட்டுக்குள் புகுந்து அவர்கள் படுத்த இடத்தில் படுத்துக்கொள்கிறது. சிறிது நேரம் கழித்து தூங்கி கொண்டிருக்கும் பிச்சுமணியின் மகன்களை பாசமாக மோதி எழுப்புகிறது. அதேபோல் இரவானதும் பிச்சுமணி குடும்பத்தினர் தூங்கும் வரை அவர்களுடன் விளையாடி விட்டு சென்று விடுகிறது.பிச்சுமணி குடும்பத்தினர், தாங்கள் சாப்பிடும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் கன்றுக்குட்டிக்கும் கொடுக்கின்றனர். தினமும் கன்றுக்குட்டியை குளிக்க வைத்து துண்டால் துடைத்து பராமரித்து வருகின்றனர். அதேபோல் பிச்சுமணி வீட்டில் வளர்த்து வரும் நாய், ஆடுகளும் செய்வதை அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.