கர்நாடகாவில் பறவைக்காய்ச்சல் எதிரொலி தமிழகத்தில் பரவாமல் தடுக்கநடவடிக்கை வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு
5/21/2016 12:10:36 PM
செங்கோட்டை: கர்நாடகாவில் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் புளியரை சோதனை சாவடியில் நிறுத்தி கிருமி நாசினி மருந்து தெளிக்கின்றனர்.கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட கோழிகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் அழித்து வருகின்றனர். தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.தமிழக - கேரள எல்லையான புளியரை சோதனை சாவடியில் கால்நடைத்துறை அதிகாரிகள் முகாமிட்டு கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி டயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பறவை காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில் கிருமி நாசினி மருந்து தெளிக்கின்றனர். கால்நடை மருத்துவர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் புளியரை பஞ்சாயத்து பணியாளர்கள் அடங்கிய ஐந்து பேர் கொண்ட 2 குழுவினர் 24 மணி நேரமும் இப்பணியில் ஈடுபடுகின்றனர்.கால்நடைத்துறை மருத்துவர் சுமதி கூறுகையில், ‘மாவட்ட கால்நடைத்துறை இயக்குனர் அறிவுரையின் பேரில் தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க, தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்’ என்றார்.