கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு அதிமுக வேட்பாளர் ஓட்டம்
5/2/2025 3:43:56 PM
மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர் அருகே உறங்கான்பட்டி ஊராட்சியில் இருந்து குப்பச்சிபட்டி, அய்யமுத்தான்பட்டி, தம்பட்டமலைபட்டி ஆகிய ஊர்களுக்கு செல்லும் 3 கிமீ தூர சாலை சில வருடங்களுக்கு முன்பு பழுதானது. புதிய சாலை அமைப்பதற்காக பழைய சாலையை கிளறி பணிகளை மேற்கொண்டனர். 2 ஆண்டுக்கு முன்பு துவங்கிய இப்பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இதுகுறித்து ஊராட்சி தலைவர், எம்எல்ஏ உட்பட பலரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதை கண்டித்து அய்யமுத்தான்பட்டி முழுவதும் வீடுகள், தெரு விளக்குகள் என அனைத்து இடங்களிலும் கருப்பு கொடி ஏற்றி தேர்தலை புறக்கணிக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.
நேற்று மாலை இதை அறியாமல் அதிமுக வேட்பாளர் பெரியபுல்லான், உறங்கான்பட்டி ஊராட்சியில் ஓட்டு சேகரிக்க சென்றார். குப்பச்சிபட்டியில் சில பெண்கள் மட்டும் நின்றனர். அவர்கள் வேட்பாளரிடம், ‘உங்களை வரவேற்க கூடாது என அனைவரும் முடிவு எடுத்துள்ளோம்.சாலை அமைக்காமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே நாங்கள் இங்கே நிற்கிறோம்’ என்றனர். இதனால் அய்யமுத்தான்பட்டிக்குள் நுழையாமல் அதிமுக வேட்பாளர் வந்த வழியே ஓட்டம் பிடித்தார்.
இதுகுறித்து அய்யமுத்தான்பட்டியை சேர்ந்த லட்சுமணன் கூறியதாவது, ‘சாலை வசதி இல்லாததால் 3 கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகிறோம். பலமுறை எடுத்து கூறியும் ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் நாங்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்’ என்றனர்.