தனியரசு எம்எல்ஏ மீது கட்சியினர் பகீர் புகார்
5/2/2025 3:43:32 PM
கரூர்: தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிர்வாகிகள் கூட்டம் கரூர் மாவட்ட செயலாளர் கார்வேந்தன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் கட்சி தலைவர் தனியரசு எம்எல்ஏவின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கடந்த 23ம் தேதி சென்னையில் நடந்த கூட்டத்தில் தனியரசுவை கட்சியில் இருந்து நீக்கினர். அது சம்பந்தமாகவும், எதிர்கால நடவடிக்கைள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட தலைவர் ஆறுமுகம், கரூர் மாவட்ட செயலாளர் கார்வேந்தன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 11 மாவட்டத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் கரூர் மாவட்ட செயலாளரும் ஒருங்கிணைப்பாளருமான கார்வேந்தன் கூறுகையில், ‘தனியரசு இந்த பேரவையை ஆரம்பித்தபோது அனைவரும் பாடுபட்டோம். தற்போது 2ம் முறையாக அதிமுக கூட்டணியில் சீட் வாங்கி போட்டியிடுகிறார். இதுபற்றிய முடிவை எந்த நிர்வாகியிடமும் அவர் கலந்தாலோசிக்கவில்லை.தொடர்ந்து பணம் வசூலில் மட்டுமே குறியாக இருக்கிறார்.
எந்த நிர்வாகியையும் மதிப்பது கிடையாது. பொதுக்குழு, செயற்குழுவை கூட்டுவதில்லை. கட்சியை வியாபாரமாக்கி சுயநலத்துக்கு பயன்படுத்தியதை தவிர அவர் எதுவும் செய்யவில்லை. இனியும் அவரை நம்பி பயன் இல்லை என அவரை நீக்கியுள்ளோம், அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட பதவிகளில் இருந்து தனியரசு நீக்கப்பட்டுவிட்டார்.அடுத்த கட்டமாக இயக்கத்தை பதிவு செய்து முறைப்படி குழுக்கூட்டங்களை நடத்துவோம். நிதி பற்றிய கணக்கை வெளிப்படையாக காட்டுவோம். பேரவை உறுப்பினர்கள் அவரவர் விருப்பப்பட்ட கட்சிக்கு வாக்களிக்கலாம்’ என்றார்.