திமுக - காங்கிரஸ் கூட்டணி ஜெ.வை வீழ்த்திக் காட்டும் இளங்கோவன் உறுதி
5/2/2025 3:42:00 PM
அறந்தாங்கி: அறந்தாங்கியில் காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரனை ஆதரித்து மாநில காங்கிரஸ்தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியதாவது:இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல். நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் நடைபெறும் தேர்தல். தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் கொளுத்தும் வெயிலில் பொதுமக்களை அடைத்து வைத்து கொல்பவர்கள் தான் கெட்டவர்கள். தமிழகத்தில் நல்ல திட்டங்களை நிறைவேற்றுவேன், நல்லதை செய்வேன் என பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தவர் ஜெயலலிதா. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் தமிழக மக்களுக்கு செய்தது வெறும் ஜீரோ தான். காரணம் தமிழக மக்களுக்கு ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை. மக்களை மக்களாகவே மதிக்கவில்லை.
சென்னையில் ஏரியை திறந்து விட்டதால் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்தார்கள். ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சிசைக்காக சேர்க்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் தங்கள் உடைமைகளை இழந்தார்கள். அப்போது மக்களை சந்தித்து ஜெயலலிதா ஆறுதல் சொன்னாரா, அவர்களை கண்டு கொள்ளவில்லை. ஒரே ஒரு முறை காரில் இருந்தபடியே அன்பார்ந்த வாக்காள பெருமக்களே என கூறி சென்றார்.
நமது வாழ்க்கை வளம் பெற வேண்டுமானால் திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை அள்ளி தெளித்து ஆட்சி வந்த ஜெயலலிதாவை வீழ்த்த திமுக, காங்கிரஸ் கூட்டணியால் மட்டுமே முடியும். வீழ்த்திக்காட்டும். தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்புடன் வாழ திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
காரைக்குடியில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் கே.ஆர்.ராமசாமியை ஆதரித்து பேசுகையில், ‘இந்தியாவிலேயே மக்களை சந்திக்காத ஒரு முதல்வர் ஜெயலலிதா தான். ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுக்கு மேஜையை தட்டுவது, அமைச்சர்களுக்கு காலில் விழுவதுதான் வேலை. அவர்களை கொத்தடிமைகளாக வைத்துள்ளார். லஞ்சம் லாவண்யத்தின் மொத்த உருவம் ஜெயலலிதா’ என்றார்.